இதெல்லாம் வெளியே வச்சுக்கோங்க.! அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

Published : Oct 17, 2025, 01:03 PM IST

ராமதாஸ் மற்றும் அன்புமணி என இரு அணிகளாக பிரிந்து உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக்கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு, பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

PREV
14

பாமகவில் உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ராமதாஸ் தரப்பில் ஒரு பிரிவினரும், அன்புமணி தரப்பில் ஒரு பிரிவினர் என இரண்டாக பிரிந்துள்ளனர். இதன் காரணமாக சட்டமன்றத்திலும் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் ராமதாஸ் அணியாகவும், மற்ற 3 பேர் அன்புமணி அணியிலும் உள்ளனர். 

இதில் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருக்கும் ஜி.கே.மணியையும், கொறடாவாக இருக்கும் அருளையும் பதவியில் இருந்து நீக்க அன்புமணி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக சபாநாயகருக்கும் அன்புமணி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபையில் இன்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

24

பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜி கே மணியை மாற்றக்கோரி சபாநாயகரிடம் கொடுத்த கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி தரப்பு ஆதரவு எம் எல் ஏக்கள் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர். 

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ராமதாஸ் தரப்பு எம் எல் ஏ அருளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு எம் எல் ஏக்கள் மூவரும் சபாநாயகரின் இருக்கை முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

34

அப்போது விளக்கமளித்த சபாநாயகர், சட்டப்பேரவையை பொறுத்தவரை எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்குவதற்கான விதிமுறை இருப்பதாகவும், மீதமுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்குவது தன்னுடைய முடிவு எனவும், பாமகவின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

44

மேலும் 8 உறுப்பினர்கள் இருக்கும் கட்சி ஒரு குழுவாக மட்டுமே செயல்படும் எனவும், தன்னிடம் கொடுத்த கடிதம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் அன்புமணி தரப்பு எம் எல் ஏக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொண்டார். ஆனால் தொடர்ச்சியாக அன்புமணி தரப்பு ஆதரவு எம் எல் ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில்,

 உடனடியாக இருக்கைக்கு செல்லவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். தங்களின் கோரிக்கையை பரிசீலிக்காத சபாநாயகரின் செயல்பாடுகளை கண்டித்து அன்புமணி ஆதரவு எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories