மீண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்..
மாணவர் சேர்க்கை அறிவிக்கையை கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்த போதே, இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அவ்வாறு செய்திருந்தால் அனைத்து மாணவர்களும் அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள். அதனால் சில பள்ளிகளில் உபரி இடங்களும், சில பள்ளிகளில் பற்றாக்குறை இடங்களும் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இது அரசின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட குழப்பம் ஆகும்.
இப்போது நர்சரி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 20 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான கட்டணத்தை அரசால் செலுத்த முடியாது. அதேநேரத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 18,600 இடங்களில் சேர மாணவர்கள் இல்லை. அதனால் அந்த இடங்களுக்குரிய பணம் தமிழக அரசிடம் உபரியாக இருக்கும். எனினும், அதை கல்விப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதற்குத் தான் திமுக அரசு ஆசைப்பட்டதா? திமுக அரசு அதன் தவறான கொள்கைகளால் தான் தமிழகத்தில் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகிய இரண்டையும் சீரழித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல.... மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகி விடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.