AIADMK: எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அல்ல நீங்கள்! உங்கள் ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்கு.. EPS விளாசும் முன்னாள் நிர்வாகி

Published : Jul 05, 2026, 02:43 PM IST

EPS: தற்போதைய தலைவர் பணபலத்தால் பதவியை அடைந்ததாகவும், தொண்டர்களை உதாசீனப்படுத்தியதாலேயே கட்சி இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தலைமை மாறாவிட்டால், கட்சியிலிருந்து வெளியேறுவது தொடரும்.

PREV
15

அதிமுகவில் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடுத்தடுத்து விலகி தவெகவில் இணைந்து வரும் நிலையில் அம்மா வளர்த்த இயக்கமும் மீண்டும் வலுப்பெற வேண்டுமென்றால், தலைமை மாற்றம் ஒன்றே தீர்வு என முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில்: யாருக்கு நீங்கள் உத்தரவிடுகிறீர்கள்? உங்கள் உத்தரவை செயல்படுத்துவது யார்? பெரும்பாலான தொண்டர்கள் வெளியேறிய நிலையில், உங்கள் உத்தரவுக்கு என்ன மரியாதை இருக்கிறது? நீங்கள் கணிக்கத் தவறியது தவெகவை அல்ல; அதிமுக தொண்டர்களின் மனநிலையைத்தான். உங்களை இன்னொரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதா அம்மாவாகவோ தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படவில்லை.

25

நீங்கள் உங்கள் பணபலத்தால் எம்.எல்.ஏ.க்களையும், பொதுக்குழு உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கி பொதுச்செயலாளர் பதவியை அடைந்தீர்கள். மக்கள் மனங்களை வென்றோ, தொண்டர்களின் ஆதரவைப் பெற்றோ தலைமைப் பொறுப்புக்கு வரவில்லை. கட்சி மீது இருந்த விசுவாசத்திற்குக் கட்டுப்பட்டு தொண்டர்களும், இரட்டை இலை மீது இருந்த அபிமானத்தால் பொதுமக்களும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தார்கள். ஆனால், நீங்கள் அந்தத் தொண்டர்களைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி, சர்வாதிகாரி போன்று நடந்துகொண்டீர்கள்.

35

2017 முதல் இன்று வரை உங்களால் நீக்கப்பட்டவர்களும், உங்களால் வெளியேறியவர்களும் கொண்ட பட்டியலை மீண்டும் ஒருமுறை பரிசீலித்துப் பார்க்கத் தவறிவிட்டீர்கள். தவெக என்ற கட்சி உங்கள் பலவீனத்தால் வளர்ந்தது. உங்கள் ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்குச் சென்றன என்பதை உணர்ந்தும், தற்போதும் நீங்கள் திருந்தத் தயாராக இல்லை. உங்களை விட்டு விலகுபவர்களை 'துரோகி' என்று முத்திரை குத்துகிறீர்கள்.

45

ஆனால், 2018-ல் பாஜகவுடன் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கே.சி.பி தெரிவித்த கருத்துக்கு எந்தவித விளக்கமும் கேட்காமல், கே.சி. பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கினீர்கள். கே.சி.பி.யை மீண்டும் கட்சியில் இணைக்க பல தலைவர்கள் பலமுறை முயற்சி எடுத்தும், உங்கள் சுயநலத்தாலும், பதவி வெறியாலும், காழ்ப்புணர்ச்சியாலும் இன்றுவரை அதைத் தவிர்த்தீர்கள். இதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி, கட்சியை இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். திமுக எதிர்ப்பு, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சி, தொண்டர்களை அரவணைத்துச் செல்வது, சாதாரண தொண்டனுக்கும் பொறுப்புகள் வழங்குவது ஆகியவையே அதிமுகவின் பலங்கள்.

55

ஆனால், நீங்கள் லீமா ரோஸ் போன்ற வசதிப்படைத்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தொகுதிகளை ஒதுக்கினீர்கள். நீங்கள் பொறுப்பேற்றதிலிருந்தே, "தேர்தலில் 20 கோடி ரூபாய் கொடுத்தால்தான் சீட்டு" என்ற நிலையை உருவாக்கி, அரசியலை வியாபாரமாக நடத்திக்கொண்டு வந்தீர்கள். தொண்டர்களையும் அரவணைக்கத் தவறினீர்கள். உங்கள் ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் கொடிகட்டிப் பறந்தன. திமுக ஆட்சியிலும், திமுகவுடன் கூட்டணி அமைத்து கொள்ளையடித்தீர்கள். இன்றுவரை தோல்விக்கான காரணத்தை நீங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான், உங்கள் தலைமையில் அதிமுக வெற்றிபெறாது என்று அனைவரும் உணர்ந்துவிட்டனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கமும், ஜெயலலிதா அம்மா வளர்த்த இயக்கமும் மீண்டும் வலுப்பெற வேண்டுமென்றால், தலைமை மாற்றம் ஒன்றே தீர்வு. அதற்கு நீங்கள் ஒத்துழைக்கத் தவறினால், தொடர்ச்சியான வெளியேற்றங்களைத் தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories