
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய ஒரு காட்டு யானைக்கு ஹைட்ரோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்த யானையின் வயிற்றில் 15 மாத ஆண் யானைக் குட்டி முழு வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதும், அதையும் தாண்டி கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள்இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களின் அலட்சியத்தால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான யானைகள் வாழ்கின்றன. இவை அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கும், தோட்டங்களுக்கும் வருவது வழக்கமாக உள்ளது. சமீபகாலமாக இவ்வாறு ஊருக்குள் வரும் யானைகள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதும் வழக்கமாகி விட்டது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் அவற்றின் செரிமான மண்டலத்தைப் பாதித்து, உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுகின்றன.
கோவை மருதமலை அடிவாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த ஒரு பெண் காட்டு யானைக்கு வனத்துறையினர் மே 17 ஆம் தேதி முதல் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது தாய் யானையுடன் இருந்த குட்டி யானை, அவ்வப்போது தாய் யானையை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்த காட்சி நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது. மருத்துவக் குழுவினர் மற்றும் வனத்துறையினர் நான்கு நாட்களாக அங்கேயே முகாமிட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட யானைக்கு ஹைட்ரோ தெரபிமூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர். ஐந்து கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். யானைக்கு காது நரம்பு மூலம் மருந்துகளும், குளுக்கோஸும் அளிக்கப்பட்டன. ஹைட்ரோ தெரபி சிகிச்சைக்காக, வனப்பகுதியில் தற்காலிகக் குட்டை அமைக்கப்பட்டு அதில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு, பொக்லைன் மூலமாக யானையை தண்ணீருக்குள் இறக்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நான்கு நாட்களாக சுமார் 100 பாட்டில் குளுக்கோஸ் யானைக்கு ஏற்றப்பட்டு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டனர். யானையின் உடலிலும் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அந்த காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானைக்கு நரம்பு வலி சிகிச்சை மூலமாகவும் ஊசி மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி பசுந்தீவனம், பழங்கள், களி மற்றும் தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன. யானை சிறிதளவு பழங்களை மட்டுமே எடுத்துக் கொண்டது. ஹைட்ரோதெரபி கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில், யானை மாலை 3:45 மணியளவில் இறந்துவிட்டது. யானை இறந்ததற்கான காரணம் மாரடைப்புஆக இருக்கலாம், ஆனாலும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண் யானைக்கு இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, யானையின் வயிற்றில் 15 மாதங்கள் நிரம்பிய நன்கு வளர்ச்சியடைந்த ஆண் யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள்யானையின் வயிற்றில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வனம் மற்றும் விலங்குகள் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, வனப்பகுதிகளிலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனிதர்களாகிய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.