சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த சில காலமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பலரும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தி வருகின்றனர். இது இளைஞர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த செயலியால் பலரும் தங்களது பணத்தையும் இழக்கும் சூழலால் அவர்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்று சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சூதாட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெலங்கானாவைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
23
ஆன்லைன் சூதாட்டத்தை பிரபலப்படுத்திய பிரபலங்கள்
புகாரின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகைகள் நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, பிரணிதா உள்ளிட்டவர்கள் மீது தெலங்கானா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
33
அமலாக்கத்துறை அலுலகத்தில் சுரேஷ் ரெய்னா
இந்த வழக்கு தொடர்பாக விஜய்தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் சுரேஷ் ரெய்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.