களத்தில் மோதல்: முகமது சிராஜுக்கு மட்டும் அபராதம்; தப்பிய ஹெட்; ஐசிசி செய்தது சரியா?
2வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட், முகமது சிராஜ் இடையே மோதல் உண்டானது. இதனால் முகமது சிராஜுக்கு ஐசிசி 20% அபராதம் விதித்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட், முகமது சிராஜ் இடையே மோதல் உண்டானது. இதனால் முகமது சிராஜுக்கு ஐசிசி 20% அபராதம் விதித்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார். இந்திய வீரர்களின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய டிராவிஸ் ஹெட் 141 பந்தில் 140 ரன் எடுத்து அவுட் ஆனார். அப்போது அவருக்கும், இந்திய வீரர் முகமது சிராஜுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஹாட் டாபிக் ஆக மாறியது.
அதாவது அதிரடி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் சிராஜின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே அவர் சிராஜின் சூப்பர் யார்க்கரில் போல்டானார். அவர் அவுட் ஆன உடன் சிராஜை பார்த்து சில வார்த்தைகளை கூறினார். சிராஜும் பதிலுக்கு கோபமாக 'வெளியே போ வெளியே போ'என்பதுபோல் கோபமாக சைகை காட்டினார்.
பின்பு ஹெட்டும் கோபமாக சிராஜை நோக்கி சில வார்த்தைகளை பேசியபடி சென்றார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த டிராவிஸ் ஹெட், ''நான் அவுட் ஆன உடன் சிராஜிடம் நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள் என்றுதான் கூறினேன். அவர் அதை தவறாக புரிந்து கொண்டு கோபம் கொண்டார்'' என்று கூறினார்.
'இது படுமோசம்; இனிமே 'இப்படி' செய்யுங்க'; ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் அட்வைஸ்!
இதேபோல் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசிய முகமது சிராஜ், ''நான் ஹெட் அவுட்டானபோது விக்கெட் எடுத்த சந்தோஷத்தில் கொண்டாடினேன். அவரிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர் தான் என்னை தவறாக பேசினார். அவர் என்னிடம் நன்றாக பந்துவீசினீர்கள் என்று கூறியதாக சொல்வது பொய். ஹெட் என்ன சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நான் எல்லோரையும் மதிக்கிறேன். மற்ற வீரர்களை அவமரியாதை செய்வது எனது வேலையல்ல. ஆனால் ஹெட் செய்தது எனக்கு பிடிக்கவே இல்லை'' என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், போட்டி நடுவரின் புகாரின்பேரில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டியின்போது நடத்தை விதிகளை மீறியதற்காக முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20% அபராதம் விதித்துள்ளது. அதே வேளையில் ஹெட்டுக்கு ஐசிசி எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ளது. அபராதம் ஏதும் விதிக்கவில்லை.
மேலும் இருவரும் மோசமான நடத்தைக்கான டி மெரிட் என்ற புள்ளியை பெற்றுள்ளனர். ஹெட், சிராஜ் இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருவருமே போட்டி நடுவரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் ஹெட்டுக்கு மட்ட்டும் ஏன் ஐசிசி அபராதம் விதிக்கவில்லை என ரசிகர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
WTC பைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா? என்ன நடக்க வேண்டும்? பாய்ஸ்ன்ட்ஸ் டேபிள் சொல்வதென்ன?