
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
சமீபத்திய மாதங்களில் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மோசமான ஃபார்மில் இருந்து வருகின்றனர், ஆனால் வரவிருக்கும் மினி-உலகக் கோப்பை அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், இழந்த ஃபார்மை மீண்டும் கண்டறியவும் சரியான வாய்ப்பாகும். சாம்பியன்ஸ் டிராபியில் அதிரடியில் அசத்தப்போகும் 7 வீரர்கள் குறித்து பார்ப்போம்.
விராட் கோலி
விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாகவே தனது ஃபார்முக்கு திரும்பினார், அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் எடுத்தார். 36 வயதான கோலி சில மாதங்களாக மோசமான ஃபார்மில் இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ரஞ்சி டிராபியில் சரியாக விளையாடவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐசிசி போட்டிகளில் கோலி எப்போதும் நம்பகமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இந்தியாவுக்காக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாபர் அசாம்
பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமின் ஃபார்ம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாபர் அசாம் சராசரியாக 20.67 ரன்கள் எடுத்து 62 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடந்த ஆண்டு 30 வயதான பாபர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் உட்பட சராசரியாக 57 ரன்கள் எடுத்து 228 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் கடைசியாக நேபாளத்திற்கு எதிரான ஆசியக் கோப்பை 2023ல் சதம் அடித்தார். சாம்பியன்ஸ் டிராபி 2025இல் தனது ஃபார்முக்கு திரும்பவும் வாய்ப்பு உள்ளது.
மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்? அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட அணி எது?
ஸ்டீவ் ஸ்மித்
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மோசமான ஃபார்மில் இருந்தார். அவர் சராசரியாக 20.50 ரன்கள் எடுத்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இருந்து விலகிய பிறகு ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், ஸ்மித்தின் ஃபார்ம் மிகவும் முக்கியமானது.
கடந்த ஆண்டு ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 3 அரைசதங்கள் உட்பட சராசரியாக 43.71 ரன்கள் எடுத்து 306 ரன்கள் குவித்தார். ஆனால், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் மோசமான தொடக்கத்தைப் பெற்றார், இது அவரது ஃபார்ம் குறித்த கவலைகளை எழுப்பியது. ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஜோ ரூட்
ஜோ ரூட் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் 50 ரன்கள் எடுத்தாலும், மூன்று போட்டிகளில் சராசரியாக 37.33 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவர் சரியான பார்மில் இல்லை. அவர் கடைசியாக சதம் அடித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிறது, மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பிய அவர் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் அதிரடியில் அசத்த காத்திருக்கிறார்.
ரோகித் சர்மா
சாம்பியன்ஸ் டிராபியில் ஃபார்மை மீட்டெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படும் மற்றொரு வீரர் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோசமான டெஸ்ட் தொடர், அதைத் தொடர்ந்து ரஞ்சி டிராபியில் சராசரி ஆட்டம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் எடுத்தார். மீண்டும் தனது வழக்கமான ஆட்டத்தின் மூலம் சாம்பியன்ஸ் டிராபியில் சிக்ஸர் மழை பொழியப்போகிறார் ரோகித் சர்மா.
ஹாரி புரூக்
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஓடிஐ தொடரில் ஹாரி புரூக் கடுமையாக சொதப்பினார். இந்திய சுற்றுப்பயணம் முழுவதும் அவர் 50 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக அவரது ஃபார்ம் குறித்த கவலைகள் எழுந்தன. சுழற்பந்து வீச்சுக்கு எதிரான அவரது போராட்டம் இந்திய தொடர் முழுவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
இருந்தாலும் ஆக்ரோஷமான ஸ்ட்ரோக்பிளே மற்றும் விரைவாக ரன்கள் எடுக்கும் திறன் ஆகியவற்றை ஹாரி புரூக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிட்ச்களில் ஏராளமான சிக்சர்களை பறக்க விட்டவர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபியில் ஹாரி புரூக்குகு அதிரடி கைகொடுக்க வாய்ப்புள்ளது.
டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட் உலகின் அதிரடி வீரர்களில் முன்னணியில் உள்ளார். ஆனால் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாரியாக விளையாடவில்லை. டிராவிஸ் ஹெட் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு முக்கிய வீரர். டாப் ஆர்டரில் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை அந்த அணிக்கு கைகொடுக்கும். ஐசிசியின் பெரிய போட்டிகளில் டிராவிஸ் ஹெட் எப்போது அசத்தக்கூடியவர். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான அவரது சதம் இதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
IML 2025: மீண்டும் கிரிக்கெட் களத்தில் சச்சின், லாரா, காலிஸ்! 90 கிட்ஸ்களே ரெடியா?