India vs Australia Test Series
அதிரடியில் கலக்கிய சாம் கான்ஸ்டாஸ்
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அறிமுக வீரரான 19 வயதான சாம் கான்ஸ்டாஸ், அனுபவ வீரர் உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள்.
முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் கண்ட சாம் கான்ஸ்டாஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். உலகின் மிகச்சிறந்த பவுலரான பும்ராவின் ஓவரில் பவுண்டரியும், சிக்சர்களும் பறக்க விட்டார். பும்ராவில் பந்தில் இவர் விளையாடிய சில ஸ்கூப் ஷாட்கள் இந்திய வீரர்களை மிரள வைத்தது. பும்ரா மட்டுமின்றி சிராஜின் பந்துவீச்சையும் சிதறடித்த சாம் கான்ஸ்டாஸ் தனது முதல் போட்டியிலேயே அதிரடி அரைசதம் (6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 65 பந்தில் 60 ரன்கள்) எடுத்து ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
India vs Australia 4th Test
டிராவிஸ் ஹெட் டக் அவுட்
பின்பு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்சேன், கவாஜாவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். சில பவுண்டரிகளை ஓடவிட்ட கவாஜா தனது 26வது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் இவர் அரைசதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும். ஸ்கோர் 154 ரன்களாக உயர்ந்தபோது கவாஜா 57 ரன்னில் பும்ராவின் ஷாட்பிட்ச் பந்தில் அவுட்ட்டானார். பின்பு களத்துக்கு வந்த ஸ்டீபன் ஸ்மித் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை சேகரித்தார்.
மறுபக்கம் சில அழகான ஷாட்களை அடித்த மார்னஸ் லபுஸ்சேன் 21வது அரைசதத்தை விளாசினார். நங்கூரம் போல் நின்று ஆடிய அவர் 72 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்பு இந்தியாவுக்கு எப்போதும் தலைவலியாக இருக்கும் டிராவிஸ் ஹெட் களம் புகுந்தார். இன்றும் அவர் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ராவின் சூப்பரான இன் ஸ்விங் பந்தில் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
1,445 நாட்களுக்கு பிறகு பும்ரா பந்தில் பறந்த சிக்சர்; காட்டடி அடித்த இளம் வீரர்; யார் இந்த சாம் கான்ஸ்டாஸ்?
Steven Smith Batting
ஸ்டீவ் ஸ்மித் அரை சதம்
அதாவது பந்து வெளியே செல்லும் என தவறாக கணித்து ஹெட் அதை அடிக்காமல் விட்டார். ஆனால் பந்து ஸ்விங் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. பின்னர் வந்த அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் (4 ரன்) வந்த வேகத்தில் பும்ராவின் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் ஆஸ்திரேலியா 246/5 என நெருக்கடியில் சிக்கியது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி அணியை தூக்கி நிறுத்தினார். அவருக்கு அலெக்ஸ் கேரி கைகொடுத்தார்.
முகமது சிராஜ் பந்தில் அட்டகாசமான சிக்சர் பறக்க விட்ட ஸ்டீவ் ஸ்மித் 41வது அரைசதத்தை விளாசினார். மறுமுனையில் சிறிது தாக்குப்பிடித்து ஆடிய கேரி 31 ரன்னில் ஆகாஷ் தீப் பந்தில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்பு கேப்டன் பேட் கம்மின்சும், ஸ்டீவ் ஸ்மித்தும் மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
Jasprit Bumrah Bowling
வழக்கம்போல் அசத்திய பும்ரா
முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்களை சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, ஆகாஷ் தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.
முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இன்னும் 60 அல்லது 70 ரன்கள் சேர்த்தாலே அது இந்த பிட்ச்சில் நல்ல ஸ்கோராகும். இந்திய அணியில் பும்ரா ஒருபக்கம் சிறப்பாக பந்துவீசி விக்கெட்கள் சாய்க்க, மறுபக்கம் மற்ற பாஸ்ட் பவுலர்கள் சரியாக பந்துவீசாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
Mohammed Siraj Worst Bowling
தவறிழைத்த ரோகித் சர்மா
ஆகாஷ் தீப் சிறப்பான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசினாலும் 1 விக்கெடுக்கு மேல் எடுக்க முடியவில்லை. இந்த தொடரில் விக்கெட் எடுக்க தடுமாறி வரும் சிராஜ், இந்த போட்டியிலும் 15 ஓவர்களில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர, விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. முதல் நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் தவறுகளை இழைத்துள்ளார்.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய சாம் கான்ஸ்டாஸ் பாஸ்ட் பவுலிங்கை எளிதில் சமாளித்தார். ஆனால் ஸ்பின் பந்தை கணிக்க முடியாமல் தடுமாறி அவுட் ஆனார். ஆகையால் அவர் அதிரடியாக ஆடத்தொடங்கியபோதே ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்திருந்தால் சாம் கான்ஸ்டாசை அரைசதம் எடுக்க விடாமல் அவுட்டாக்கி இருக்கலாம். மேலும் பந்து ஓரளவு திரும்பிய நிலையில், ரோகித் சர்மா வாஷிங்டன் சுந்தருக்கும் போதுமான ஓவர்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kohli Vs Konstas: அறிமுக நாயகனுடன் மல்லுகட்டிய கோலி: சிட்னி டெஸ்டில் கோலி விளையாடுவதில் சிக்கல்?