ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பிப்ரவரி - மார்ச் மாதத்தில் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடரை 3-1 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 2-0 என ஜெயித்தால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியும் என்பதால், இந்திய அணிக்கு இது முக்கியமான தொடர்.
எனவே இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது அவசியம். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், அந்த அணியும் இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
வெள்ளைப்பந்து அணிகளின் முதன்மை ஸ்பின்னரான ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா, இந்தியாவில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்ற முறையில் அவர் எடுக்கப்படாமல், அவரைவிட டாட் மர்ஃபிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்டது கவனத்தை ஈர்த்தது. யார் இந்த டாட் மர்ஃபி, அவர் ஏன் அணியில் எடுக்கப்பட்டார் என்று பார்ப்போம்.
22 வயதான இளம் ஆஃப் ஸ்பின்னரான டாட் மர்ஃபி, 14 லிஸ்ட் ஏ போட்டிகளிலும், 7 முதல் தர போட்டிகளிலும் ஆடியுள்ளார். 7 முதல் தர போட்டிகளில் ஆடி 29 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் அவர் ஆடியதே இல்லை. பிக்பேஷ் டி20 லீக்கில் 2021ம் ஆண்டிலிருந்து சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஆடிவருகிறார். இலங்கை சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்துவீசினார். ஏற்கனவே துணைக்கண்ட நாடான இலங்கையில் அவர் சிறப்பாக பந்துவீசியதால் இந்தியாவிலும் அவர் சோபிப்பார் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
நீ அவசரப்படாம நின்னு ஆடி சதம் அடி.. மற்றதை நான் பார்த்துக்குறேன்னு சொன்னார் தோனி..! கம்பீர் நெகிழ்ச்சி
டாட் மர்ஃபி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி, உள்நாட்டு கிரிக்கெட்டில் டாட் மர்ஃபி அபாரமாக ஆடி கவனத்தை ஈர்த்தார். ஆஸ்திரேலியா ஏ அணியிலும் சிறப்பாக செயல்பட்டார். தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் வலுவான ஸ்பின் ஆப்சனாக உருவெடுத்துள்ளார் என்று பெய்லி கூறினார்.
மர்ஃபி குறித்து பேசிய ஆஸி., அணியின் சீனியர் ஸ்பின்னர் நேதன் லயன், டாட் மர்ஃபி அனைவரியும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அவருடன் இணைந்து நிறைய ஆடியிருக்கிறேன். பிக்பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் இணைந்து ஆடுகிறேன். அவர் முக்கியமான நேரங்களில் முன்வந்து பந்துவீசக்கூடியவர். மர்ஃபி அபாரமான திறமைசாலி என்று நேதன் லயனும் புகழாரம் சூட்டியுள்ளார்.