உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சாளர்களில் யார் இடம் பெறுவார்கள்?

First Published Jan 13, 2023, 4:25 PM IST

2023 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களில் யார் இடம் பெறுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பை

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது. அதன் பிறகு ஆசிய கோப்பை, ஐசிசி கோப்பை என்று எதிலும் வெல்லவில்லை. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடந்த 2 டி20 உலகக் கோப்பைகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
 

பிசிசிஐ

இதற்காக இந்திய அணியை பலம் வாய்ந்த அணியாக்க பிசிசிஐ மற்றும் இந்திய அணி திவீரமாக இறங்கியுள்ளது. 50 ஓவர்கள் உலகக் கோப்பைக்காக 20 வீரர்களை பிசிசியை ஏற்கனவே தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த 20 வீரர்களை டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளிலும் சுழற்சி முறையில் இறக்கி அவர்களை பரிசோதிக்க பிசிசிஐ முடிவு செய்து அதன்படி இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஆல் ரவுண்டர்கள்:

இந்த நிலையில், சுழற் பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர சகால், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
 

யுஸ்வேந்திர சகால்:

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இடம் பெற்றிருந்த யுஸ்வேந்திர சகால் 3 டி20 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளும், ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் பங்கேற்று ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். ஆனால், ஒரு போட்டியில் கூட ஆட்டநாயகன் விருது பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், யுஸ்வேந்திர சகாலுக்கு உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 

குல்தீப் யாதவ்:

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடாத குல்தீப் யாதவ்விற்கு இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்திய அணியை வின்னிங் ஷாட் அடித்து வெற்றி பெற வைத்துள்ளார். இதே போன்று கடந்த ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் கைப்பற்றினார். தொடர்ந்து தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் குல்தீப் யாதவ்விற்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்‌ஷர் படேல்:

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 2 விக்கெட்டும், 31 பந்துகளில் 6 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 65 ரன்களும் குவித்தார். 3ஆவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். 2ஆவது ஒரு நாள் போட்டியில் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். பந்து வீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். இப்படி டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்‌ஷர் படேலுக்கு கண்டிப்பாக உலக்கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
 

வாஷிங்டன் சுந்தர்:

பந்து வீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் திறமையை கொண்டுள்ள தமிழக வீரர் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். பந்து வீச்சிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதையடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ரவிச்சந்திரன் அஸ்வின். பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசினார். இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் இடம் பெறவில்லை. இதையடுத்து வரும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது.
 

ரவீந்திர ஜடேஜா

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து ரவீந்திரா ஜடேஜா நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அணியில் இடம் பெறவில்லை. இன்னமும் ஓய்வில் தான் இருக்கிறார். இலங்கை தொடரில் இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா, நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!