இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் அணி தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முக்கிய முடிவை எடுத்தது.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டி இஸ்லாமாபாத்தில் நடந்து முடிந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாட முடியாது எனவும் உடனடியாக நாடு திரும்புவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
24
ராவல்பிண்டிக்கு போட்டிகள் மாற்றம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், முத்தரப்பு டி20 தொடர் இஸ்லாமாபாத் நகரில் இருந்து ராவல்பிண்டி நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஏழு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
34
போட்டி அட்டவணை மாற்றம்
முன்னதாக, நவம்பர் 29 அன்று நடைபெறும் இறுதிப் போட்டி உட்பட ஐந்து ஆட்டங்களை லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீதமிருக்கும் அனைத்து போட்டிகளையும் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் PCBவெளியிட்ட அறிக்கையில், ''செயல்பாட்டு மற்றும் போட்டித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பரஸ்பர கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் (ZC) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து அட்டவணையை மாற்றியமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது'' என்று கூறபப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தையும் தொடரும் என்றும், எந்த வீரரோ அல்லது அதிகாரியோ நாடு திரும்பத் திட்டமிடவில்லை என்றும் அந்த அணி மேலாளர் மஹிந்த ஹலங்கொட தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை அணி பாகிஸ்தானில் தொடர்ந்து விளையாடும் என்று உறுதியாகியுள்ளது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர இலங்கை அணி எடுத்த முடிவிற்கு பிசிபி தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்துள்ளார்.