இந்திய அணியில் 2004ம் ஆண்டே அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த விக்கெட்கீப்பர்- பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். அதே காலக்கட்டத்தில் தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தனக்கான இடத்தை பிடித்து கேப்டன்சியையும் கைப்பற்றிவிட்டதால் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் அவ்வப்போது இந்திய அணிக்கு ஆட கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக ஆடி அசத்திவிடுவார். 2018 நிதாஹஸ் டிராபி ஃபைனலில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அதன்விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், பின்னர் மீண்டும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த முறை இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை, அருமையாக பயன்படுத்தி அபாரமாக பேட்டிங் ஆடி தன்னை ஒரு சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார். டி20 உலக கோப்பை நெருங்கிய நிலையில், தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.
இந்நிலையில், 37 வயதில் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து அபாரமாக பேட்டிங் ஆடிவரும் தினேஷ் கார்த்திக் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், அதிர்ஷ்டவசமாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துவிட்டார். பாகிஸ்தானில் பிறந்திருந்தால் இந்த வயதில் (37) உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட ஆடியிருக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார் சல்மான் பட்.