ஐபிஎல் 2026 தொடரில் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் இந்த போட்டியிலும் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். அதாவது ராஜஸ்தான் பவுலர் பிரிஜேஷ் சர்மா வீசிய பந்தை சாய் சுதர்சன் பவுண்டரிக்கு விரட்ட முயன்றார். பந்து பவுண்டரி கோட்டை நோக்கிச் சென்ற அதே வினாடியில், அவரது கையில் இருந்து நழுவி எதிர்பாராதவிதமாக ஸ்டம்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது.
விசித்தரமான மோசமான சாதனை
சாய் சுதர்சன் வெறும் 32 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவர் துரதிருஷ்டவசமாக அவுட்டாகியுள்ளார். ஏற்கெனவே ஆர்சிபிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியிலும் சாய் சுதர்சன் இதேபோல் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் ஹிட் விக்கெட் ஆன முதல் வீரர் என்ற விசித்தரமான மோசமான சாதனையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.