RR vs GT: ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் 15 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாபின் புதிய சண்டிகரில் இப்போது நடைபெற்று வரும் குவாலிஃபையர் 2 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போது வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 1 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். பின்பு வந்த துருவ் ஜூரலும் (7 ரன்) நிலைக்கவில்லை. கேப்டன் ரியான் பராக்கும் (11 ரன்) ஏமாற்றினார். தசுன் ஷனகாவும் (3) விரைவில் வெளியேறினார். நன்றாக விளையாக ரவீந்திர ஜடேஜா (19 பந்தில் 34 ரன்கள்) காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட் ஆனார்.
23
வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
மறுபக்கம் தொடக்க வீரர் 15 வயதான இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த போட்டியின் மூலம் வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு சீசனில் 700 ரன்களை கடந்த முதல் அன்கேப்டு வீரர் (Uncapped - சர்வதேச போட்டிகளில் விளையாடாத) என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது இந்திய அணிக்காக விளையாடமல் ஐபிஎல்லில் 700 ரன்களை கடந்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆவார்.
33
ஒரே தொடரில் பல சாதனைகளை படைத்த பாலகன்
முன்னதாக அன்கேப்டு வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2023 ஆம் ஆண்டில் 625 ரன்கள்) மற்றும் ஷான் மார்ஷ் (2008ஆம் ஆண்டில் 616 ரன்கள்) ஆகியோர் வைத்திருந்த சாதனையை முறியடித்து வைபவ் மாஸ் காட்டியுள்ளார். இது மட்டுமின்றி இந்த தொடரில் ஏராளமான சாதனைகள் வைபவ் சூர்யவன்ஷி வசம் உள்ளது.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் (59 சிக்ஸர்கள், 2012) 14 ஆண்டுகால சாதனையை இந்த 15 வயது பாலகன் தகர்த்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டில் டேவிட் வார்னர் அடித்த 467 பவர்பிளே ரன்கள் சாதனையை முறியடித்து, இந்த சீசனில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 500க்கும் அதிகமான ரன்கள் வைபவ் சூர்யவன்ஷி குவித்துள்ளார்.