டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அணி தேர்வு மிகச்சவாலாக இருக்கும். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை எதிர்நோக்கி ரசிகர்களும் மிகுந்த எதிர்பாப்புடனும் ஆர்வத்துடனும் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். முதல் 2 போட்டிகளில் சரியாக ஆடாத சூர்யகுமார், அதன்பின்னர் ஓபனிங்கில் சிறப்பாக ஆடினார். தொடக்க வீரராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.
ஆனால் சிறந்த வீரரான சூர்யகுமாரை ஓபனிங்கில் இறக்கி சீரழித்துவிடக்கூடாது என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சில முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறியிருந்தனர். ஆனால் அதேவேளையில் சூர்யகுமாரை ஓபனிங்கில் இறக்க சில முன்னாள் வீரர்கள் ஆதரவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தமட்டில் விராட் கோலி அவரது வழக்கமான 3ம் வரிசையில் தான் இறங்கவேண்டும். சூர்யகுமார் யாதவ் ஓபனிங், 3ம் வரிசை, 4ம் வரிசை என எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆடவல்ல சிறந்த வீரர் ஆவார். ஆனால் என்னை பொறுத்தமட்டில் அவர் ஓபனிங்கில் இறங்கக்கூடாது. 4ம் வரிசை தான் அவருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் என்று ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார்.