ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதேவேளையில், சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
இந்நிலையில், கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அஷ்வின் எடுக்கப்பட்டார். ஐபிஎல்லில் ஜொலிக்காத அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சோபிக்கவில்லை. ஆனாலும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்பட்டதை, இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரன் மோர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கிரன் மோர், அஷ்வினை அணியில் எடுத்தது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை அணியில் அஷ்வின் எடுக்கப்பட்டார். அதன்பின்னர் விடுவிக்கப்பட்டார். ஐபிஎல்லிலும் அஷ்வின் சரியாக ஆடவில்லை. அஷ்வின் அல்லது அக்ஸர் படேலுக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷமி கண்டிப்பாக இடம்பெறவேண்டும். புதிய பந்து, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என எந்த சூழலிலும் விக்கெட் வீழ்த்தக்கூடிய பவுலர் ஷமி என்று கிரன் மோர் கருத்து கூறியுள்ளார்.