சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் 5வதாக சேர்ந்ததுடன், மிக விரைவிலேயே இந்த ஜாம்பவான்களை எல்லாம் ஓரங்கட்டி டாப்பிற்கு சென்றுவிட்டார் பாகிஸ்தானின் பாபர் அசாம்.
42 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3122 ரன்களை குவித்துள்ள பாபர் அசாம், 89 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 4442 மற்றும் 2686 ரன்களை குவித்துள்ளார்.
கேப்டன்சி அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்துவிடாமல் இரண்டையுமே சிறப்பாக செய்துவரும் பாபர் அசாம், இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
இந்நிலையில், பாபர் அசாம் குறித்து பேசியுள்ள மஹேலா ஜெயவர்தனே, பாபர் அசாம் 3 விதமான ஃபார்மட்டிலும் அருமையாக ஆடிவருகிறார். அவர் 3 ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடுவார். அவர் கிஃப்ட்டாக கிடைத்த பிளேயர். எல்லாவிதமான கண்டிஷன்களிலும் அபாரமாக ஆடுகிறார். டெக்னிக், டைமிங், நிதானம் என அனைத்தையுமே ஒருசேர பெற்று, பேட்டிங்கில் அசத்துகிறார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டுக்கும் என்ன தேவை என்பதை, எப்படி ஆடவேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப திறம்பட தன்னை தகவமைத்து தெளிவாக செயல்படுகிறார். கேப்டன்சியிலும் ஜொலித்து பேட்டிங்கிலும் ஜொலிப்பது எளிய விஷயம் அல்ல. அதை பாபர் செய்கிறார் என ஜெயவர்தனே புகழாரம் சூட்டினார்.