இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்கத்தில் இருந்தே இந்தியா வரிசையாக விக்கெட் இழந்தது. ஜெய்ஸ்வால் (2 ரன்), கே.எல்.ராகுல் (14), கேப்டன் சுப்மன் கில் (21), ரவீந்திர ஜடேஜா (9), துருவ் ஜூரல் (19) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
24
கருண் நாயர் அரைசதம்
தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் ஓரளவு சிறப்பாக விளையாடி 38 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணி ஒரு கட்டத்தில் 153/6 என பரிதவித்தது. ஆனால் மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர், கருண் நாயர் சிறப்பாக விளையாடினார்கள். சூப்பர் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை ஓடவிட்ட கருண் நாயர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பி அரை சதம் (57 ரன்) அடித்தார். இதற்கிடையே நேற்று களத்தில் கருண் நாயர் செய்த ஒரு செயல் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
34
கருண் நாயர் செய்த செயல்
அதாவது கருண் நாயர் அடித்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் விழுந்து தடுத்தபோது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஆனால் பந்து பவுண்டரி செல்லவில்லை. அந்த வேளையில் கருண் நாயரும், வாஷிங்டன் சுந்தரும் 3 ரன்கள் ஓடினார்கள். அப்போது வோக்ஸ் காயம் அடைந்ததை பார்த்த கருண் நாயர் நான்காவது ரன் எடுப்பதற்கான வாய்ப்பிருந்தும் அதைத் தவிர்த்தார். வாஷிங்டன் சுந்தரிடம் 4வது ரன் ஓட வேண்டாம் என தெரிவித்து விட்டார்.
எதிரணி வீரரின் காயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல், கிரிக்கெட்டின் உண்மையான 'விளையாட்டு உணர்வை' வெளிப்படுத்திய கருண் நாயரின் இந்தச் செயலை ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர். ''கருண் நாயர் செய்தது உண்மையான கிரிக்கெட் மனப்பான்மை.
இது போன்ற தருணங்கள் தான் விளையாட்டின் மதிப்பை உயர்த்தும்'' என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸ் 2வது இன்னிங்சில் பவுலிங் போடுவாரா? என்பது தெரியவில்லை. ஆனால் கருண் நாயரின் இந்த செயல் கிரிக்கெட்டின் பெருமைக்குரிய தருணங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.