
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட் மற்றும் 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. 4வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஆலி போப் தங்கள் அணி முதலில் பந்துவீசும் என தெரிவித்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 5வது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆகாஷ் தீப் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறியதால், துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இடம்பிடித்துள்ளார்.
கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு
நான்காவது டெஸ்டில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். அதே வேளையில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக முதல் 3 டெஸ்ட்டிலும் கருண் நாயருக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 4வது டெஸ்ட்ட்டில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் ரவீந்திர ஜடேஜா அப்படியே தொடருகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் முகமது சிராஜ் பாஸ்ட் பவுலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்குகிறார்.
5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் கருண் நாயர்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்த தொடர் முழுவதும் காயத்தால் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
இந்தியா டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. ஆகையால் அதன் முக்கியத்துவம் கருதி பென் ஸ்டோக்ஸ் 5வது டெஸ்ட்டில் ஓய்வு எடுத்துள்ளார். அவரின் விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
மேலும் 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மொத்தம் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பென் ஸ்டோக்ஸ் காயத்தால் விலகியுள்ள நிலையில், அந்த அணியின் ஸ்டார் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் மற்றும் லியான் டாவ்சன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், குஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஓவல் மைதானத்தில் மழை அச்சுறுத்தல் உள்ளதால் இந்த போட்டி அடிக்கடி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்: ஆலி போப் (கேப்டன்), சாக் க்ரொலி, பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், குஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஸ் டங்.