வதோராவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 93 ரன்கள் விளாசி இந்தியா வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 26 வயதான ஆயுஷ் பதோனி முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடினார். அவர் ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசி, 25 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
24
வெற்றிக்கு உதவிய வாஷிங்டன்
வாஷிங்டன் சுந்தர் பந்துவீசும்போது தனது இடது கீழ் விலா பகுதியில் கடுமையான அசௌகரியம் இருப்பதாக புகார் தெரிவித்ததாக பிசிசிஐ ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து இன்னிங்ஸின் பாதியில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் திரும்பவில்லை. இருப்பினும் இந்தியா பேட்டிங் செய்தபோது அணி நெருக்கடியில் இருந்ததால் முக்கியமான 7 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்.
ஆயுஷ் பதோனி சேர்ப்பு
நேற்றைய போட்டிக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் இந்திய கேப்டன் சுப்மன் கில் உறுதிப்படுத்தினார். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஆயுஷ் பதோனியை பிசிஐஐ தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் ராஜ்கோட்டில் அவர் இந்திய அணியுடன் இணைவார். வலது கை பேட்ஸ்மேனான பதோனி, வலது கை ஆஃப்-ஸ்பின் பந்தும் வீசுவார்.
34
ரிஷப் பண்ட் விலகல்
ஏற்கெனவே பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ரிஷப் பண்ட் தொடரில் இருந்து விலகிய நிலையில், வாஷிங்டன் சுந்தரின் காயம் இந்திய அணிக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது. ரிஷப் பண்டுக்கு பதில் துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டார். வதோராவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. டெவன் கான்வே (56), ஹென்றி நிக்கோல்ஸ் (62), டேரில் மிட்செல் (84) அரை சதம் அடித்தனர். பின்பு விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. விராட் கோலி (93), சுப்மன் கில் (56) அரை சதம் விளாசி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்கள்.