
இனிப்புகள் சர்க்கரை நோய்க்கு ஜென்ம விரோதி. சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் மறந்து கூட இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால் பொதுவாக கொண்டாட்டமான நேரங்களில் இனிப்பு சாப்பிடுவது தான் உலக வழக்கம்.
நல்ல விஷயங்களை சொல்லும்போது வீட்டில் ஸ்வீட்ஸ், சாக்லேட் எதுவும் இல்லை என்றால், சர்க்கரையை அள்ளி வாயில் போட்டுக் கொள்வார்கள். இது எல்லோருக்கும் பொருந்தாது. நீரிழிவு நோயாளிகளை எந்த வடிவத்திலும் இனிப்பு சாப்பிடக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதனால் அவர்களுக்கு சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரித்து உடல் உபாதைகள் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆபத்து நேரிடலாம். ஆனால் இனிப்பு சாப்பிட விரும்பும் சர்க்கரை நோயாளிகளுக்கு டார்க் சாக்லேட் கொடுக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், உண்மைதான். டார்க் சாக்லேட் பல்வேறு விதமான நன்மைகளை தனக்குள் வைத்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் சிறிதளவு டார்க் சாக்லேட் சுவைப்பதால் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஆனால் இனிப்பு சாப்பிட்ட திருப்தி இருக்கும். இன்சுலின் உணர்திறன் மேம்படவும் டார்க் சாக்லேட் உதவுகிறது.
டார்க் சாக்லேட் என்றதும் ஏதோ ஒரு சாக்லேட் என நினைக்க வேண்டாம். அதில் குறைந்தது 70% கோகோ திடப்பொருட்கள் இருக்க வேண்டும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, டார்க் சாக்லேட் மட்டும் விதிவிலக்கு அல்ல. ஒரு நாளில் 28கி அளவுக்கு மட்டுமே டார்க் சாக்லேட் எடுத்து கொள்ளவேண்டும். உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை முறையாக கண்காணித்து, அதற்கேற்றபடி எடுத்து கொள்ளவேண்டும். இப்படி சரியான முறையில் எடுத்து கொண்டால் பல நன்மைகளை பெறமுடியும்.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் பீர் குடிப்பதால் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா?
நீரிழிவு நோய், டார்க் சாக்லேட் தொடர்பு:
நீங்கள் டார்க் சாக்லேட்டை உங்களுடைய உணவு பட்டியலில் சேர்க்கும் முன், டார்க் சாக்லேட்டுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே இருக்கும் தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். டார்க் சாக்லேட்டில் பாலிஃபீனால்கள் காணப்படுகின்றன. இவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கும். இந்த பண்புகள் நம் உடலில் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகள் எந்த பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது.
பாலிபினால்கள் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் இன்சுலின் திறம்பட செயல்படத் தொடங்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் நல்ல மாற்றம் நிகழும். இப்படி அதிகரிக்கும் இன்சுலின் உணர்திறன் நீரிழிவு நோய் வருவதை தாமதப்படுத்தும் அல்லது முற்றிலும் தடுக்கும். ஆரம்பகாலத்தில் சர்க்கரை நோய் வராமல் தடுக்க டார்க் சாக்லேட் உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
டார்க் சாக்லேட் இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்தக் கூடியது. இதை அளவாக உண்பதால் நீரிழிவு தொடர்பான மன அழுத்தம், பதட்டத்தைத் தணிக்க உதவும். டார்க் சாக்லேட் சர்க்கரை நோய் கட்டுப்படுத்த மட்டுமல்ல, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. ஆகவே இதய ஆரோக்கியமும் மேம்படும்.
டார்க் சாக்லேட் உண்ணும் வழிமுறை?
எல்லா சாக்லேட்களும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்டது அல்ல. ஆகவே பாலிபினால் அதிகமுள்ள டார்க் சாக்லேட்டை மட்டும் தேர்வு செய்து சாப்பிடுங்கள். இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன்களை தரும். 70 சதவீதத்திற்கு மேலான கோகோ நிறைந்த டார்க் சாக்லேட் ஆரோக்கிய நன்மைகளை தரும். இந்த சாக்லேட்டிலிருந்து சில சத்துக்களை பெற முடியும்.
இதையும் படிங்க: வேப்பிலைக்கு சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டா?
டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட் போல அல்ல. குறைந்தபட்சம் நார்ச்சத்து உள்ளது. ஸ்டீவியாவோ, மற்ற சர்க்கரையுடன் இனிப்பூட்டப்படாத டார்க் சாக்லேட்டாகவோ இருந்தால் மட்டும் உண்ணுங்கள். அதையும் அளவோடு உண்ணுங்கள். அதிகமாக உண்பதால் இரத்த சர்க்கரை அளவு மாற வாய்ப்புள்ளது. ஏனெனில் இதில் அதிக கலோரியும், சர்க்கரையும் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையால் தயார் செய்த எந்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மொத்தமாகவே சர்க்கரை உணவுகளை உண்பதை தவிர்க்க அறிவுறுத்தவில்லை. அதை உங்களுடைய சரிவிகித உணவுக்கு பின்னர் ஒரு பகுதியாக ஏதேனும் ஒரு நாள் கொஞ்சம் சாப்பிடலாம். அதுவும் அதிகமாக அல்ல; ஒரு கடி கடிக்கலாம். இரண்டு துண்டு டார்க் சாக்லேட் மட்டுமே உண்பது நல்ல பலனளிக்கும். ஆனால் மீறினால் கோளாறுதான். கவனம்!!