
தலைவலி வந்தால் எந்த வேலையும் செய்ய முடியாது. தலைக்குள் வினோதமான உணர்வு ஏற்படுவது போல் இருக்கும். தலைவலியை உடனே சரி செய்தால் போதும் என தோன்றும். அதற்காக எல்லோரும் உடனடியாக நாடும் ஒரே தீர்வு தைலம் தான்.
தலைவலி பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும். தலைவலி ஏற்பட மன அழுத்தம், நீரிழப்பு, சரியாக சாப்பிடாதது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கும். தலைவலிக்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நாடுவது தைலம் தேய்க்கும் ஒரே தீர்வு தான். இப்படி தைலம் தேய்ப்பது பலருக்கு ஒரு பழக்கமாகவே மாறி இருக்கும்.
சிலருக்கு தைலம் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. தைலத்தின் வாசனையால் தினமும் உறங்குபவர்களும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை பலருக்கு இரவில் தைல வாசனையில்லாமல் உறக்கம் என்பது துளியும் வராது. தலைவலி மட்டுமல்லாது உடல் வலிக்கும் சிலர் தைலத்தை பயன்படுத்துகின்றனர். இப்படி தைலத்தால் மட்டும் தலைவலியை கட்டுக்குள் கொண்டு வருவது சரியா? தலைவலிக்கு தைலம் தடவுவது நல்லதா? என்பதை இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: காலையில் தலைவலியுடன் எழுந்திருக்கிறீர்களா? அதற்கு என்ன காரணம்? எப்படி சரிசெய்வது?
தைலம் பயன்கள்:
கடுமையான தலைவலியால் அவதிப்படும்போது தைலம் உடனடியாக பலன் தரும். பொதுவாக இந்தியாவில் கிடைக்கும் தைலங்கள் வலிக்கான நிவாரணியாக விளங்குகின்றன. தலைவலியை மட்டுமின்றி தசை பிடிப்பையும் குணப்படுத்தும் உட்பொருள்கள் தைலத்தில் காணப்படுகின்றன.
கடுமையான தலைவலிக்கு தைலத்தை பயன்படுத்தும் போது நன்கு மசாஜ் செய்வோம். இதனால் தசைகளின் இறுக்கம் தளர்கிறது. இதனால் ரத்த ஓட்டமும் சீராகிறது. இதன் காரணமாக அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைத்து தலைவலி குறைகிறது.
பொதுவாக தலைவலி தைலங்கள் வாசனையுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த நறுமணம் மனதை தளர்வடைய செய்கிறது. மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி குறைய தைலங்கள் இவ்வாறாக உதவுகின்றன. போதுமான உறக்கமின்மை காரணத்தினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். இரவில் தைலத்தை நுகர்ந்து பார்ப்பதால் நன்றாக தூக்கம் வரும். தூக்கமின்மை பிரச்சனைக்கு தலைவலி தைலம் தீர்வாக உள்ளது.
தைலம் பக்க விளைவுகள்:
தைலம் தலைவலியிலிருந்து தற்காலிக விடுதலை அளித்தாலும், இதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். தைலங்களில் தயாரிக்கும்போது பயன்படுத்தும் சில பொருள்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனை சருமத்தில் தடவும் போது அரிப்பு, வீக்கம், முகப்பருக்கள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு தோல் பிரச்சனைகள் தீவிரமாகலாம்.
நீங்கள் தலையில் தைலம் தடவும் போது உங்களை அறியாமல் கண்களை தைலம் படுவதால் கண்களில் எரிச்சல் ஏற்படும். சில நேரம் தைலத்தை தலையில் தடவும் போது தலைமுடியில் படுகிறது. இப்படி படுவதால் முடி உதிர்வை ஏற்படுத்தக் கூடியவை. தலைவலி தைலத்தை பயன்படுத்துவதால் சில நிமிடங்கள் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம். ஆனால் உண்மையாகவே தலைவலி எந்த காரணத்திற்காக வந்ததோ அதை சரி செய்யாமல் தலைவலியை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. அதை சரி செய்யும் ஆற்றலும் தைலத்திற்கு கிடையாது.
அடிக்கடி தைலத்தை பயன்படுத்தினால் அது சரும பிரச்சனையாக வந்து நிற்கும். முகத்தில் உள்ள தோல் உடலின் மற்ற பகுதியில் உள்ள தோலைவிட உணர்திறன் அதிகம் கொண்டது. ஆகவே தைலம் அடிக்கடி தேய்க்காமல் இருப்பதே சருமத்திற்கு நல்லது.
தைலம் சில வகை மூலிகைகள் அடங்கியது. இது தலைவலியை குறுகிய காலம் குணப்படுத்தக் கூடிய தற்காலிக தீர்வு. இதில் உள்ள கற்பூரம்(camphor), மெந்தால் (menthol), யூக்லிப்டஸ் (eucalyptus) போன்றவை வலியிலிருந்து நிவாரணம் தருகின்றன. ஆனால் இதனை நீண்ட காலமாக பயன்படுத்துவது நல்ல தீர்வு அல்ல. தொடர்ச்சியான தலைவலிக்கு மருத்துவரை அணுகவேண்டும்.
இதையும் படிங்க: Exercise செய்த பிறகு தலைவலி வருதா..? காரணம் இதுதாங்க..!
சிலருக்கு வெறும் தலைவலி வராமல் அதனுடன் வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட சுகவீனங்களும் வரும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர் பரிந்துரையின்றி தைலமோ மற்ற மருந்துகளோ பயன்படுத்த வேண்டாம். நீங்கள் ஒவ்வொரு முறை தைலம் பயன்படுத்தும் போதும் உங்களுக்கு தலைவலியில் இருந்து தற்காலிக தீர்வு கிடைக்கும். அதற்காக தலைவலி வந்தால் தைலம் மட்டுமே பயன்படுத்துவது நல்லதல்ல.
நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மாற்றம், நல்ல இசை, மகிழ்ச்சியான மனநிலை போன்றவை உங்களை தலைவலியிலிருந்து தள்ளி வைக்கும். ஆகவே தினமும் தியானம், உடற்பயிற்சி போன்றவை செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். தலைவலியில் இருந்து விடுதலை பெறுங்கள்.