மக்கு குழந்தையை படிக்க வைப்பது எப்படி? இதோ டிப்ஸ்!! 

First Published | Sep 11, 2024, 3:34 PM IST

Study Tips For Kids : குழந்தைகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால் பெற்றோருக்கு அதுவே மிகப்பெரிய கவலையாக இருக்கும். அதனை மாற்ற 5 எளிய வழிகள் உள்ளன. 

குழந்தைகளுக்கு படிப்பை விட விளையாடுவது தான் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்போது குழந்தைகளுக்கு செல்போன் இருந்தாலே போதுமானதாக இருக்கிறது. புத்தகத்தை எடுத்து படிப்பது அவர்களுக்கு கடினமானதாகவும், சலிப்பானதாகவும் மாறியுள்ளது. வராத படிப்பை வா வா என்றால் எப்படி வரும் என சினிமா வசனம் பேசும் குழந்தைகளும் உண்டு. ஆனால் இந்த போட்டி உலகத்தில் படிப்பு மிகவும் முக்கியம். 

யாரும் திருட முடியாத செல்வம் படிப்பும் அதன் மூலம் பெறும் அறிவும் தான். அதனால்தான் பெற்றோர் எவ்வளவு கடன் வாங்கியாவது பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்து நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். தங்கள் குழந்தைகள் நன்றாக படிப்பதை பெற்றோர் விரும்புவார்கள். ஆனால் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் சேட்டைகள் செய்வது தான் குழந்தைகளுக்கும் வழக்கம். சின்ன சின்ன குறும்புகள் செய்தபடி குழந்தைகள் படிக்காமல் ஏமாற்றுவார்கள்.

டியூஷன் அனுப்பினால் கூட படிக்காத குழந்தைகளும் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு   படிப்பில் ஆர்வம் என்பதே இருக்காது. இதற்கு காரணம் ஏதேனும் இருக்கிறதா? எப்படி சரி செய்யலாம் என இங்கு காணலாம். 

இந்த உலகத்தில் பிறக்கும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணநலன்கள் இருப்பதில்லை. எல்லோருமே தனித்தனியானவர்கள். ஒவ்வொருவருக்கும் விருப்பு, வெறுப்புகள் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். நாம் அனைவரும் தனித்தனியான எண்ணங்கள் உடையவர்கள். நம் கைகளில் உள்ள விரல்கள் கூட ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எப்படி மனிதர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள். குழந்தைகளும் அப்படிதான். அவர்களை ஒப்பிடக் கூடாது. 

ஒப்பிடுதல் கூடாது: 

பள்ளியில் மற்ற குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு சொல்லி பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் பேசக்கூடாது. பிற குழந்தைகள் பள்ளியில் சுறுசுறுப்பாக இருப்பதும், நன்றாக படிப்பதும் அவர்களுடைய தனித்துவத்தை பொறுத்தது. அதேபோலவே உங்களுடைய குழந்தைகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அதை சொல்லிக் காட்டுவது பெரிய தவறு. இதனால் குழந்தைகள் வெறுப்புணர்வோடு வளர்வார்களே தவிர படிப்பில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படாது. 

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்தா சர்க்கரை நோய் வருமா? எச்சரிக்கும் நிபுணர்கள்!

Tap to resize

கவனச்சிதறல்: 

பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி எல்லோருக்கும் பொதுவானது. இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் கல்வி என்று அறிவுறுத்துகிறது. கல்வி ஒருவரின் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். வாழ்வியலை மாற்றி புதிய மனிதராகவே ஆக்கிவிடும்.  இதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் சிறு குழந்தைகளிடம் கல்வியின் முக்கியத்துவத்தை நான் சொல்லி புரிய வைக்க முடியாது. ஏனெனில்  அவர்களுக்கு ஏற்கனவே கல்வியின் மீது துளியும் ஆர்வம் இல்லாமல் இருக்கும்.  இதற்கு கவனச்சிதறல் தான் முக்கிய காரணம். 

சில குழந்தைகள் அமைதியாக அதிகம் பேசாதவர்களாக இருப்பார்கள். சில குழந்தைகள் குறும்புத்தனங்களுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். குறும்புக்கார குழந்தைகள் சில நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் ஆர்வமாக இருக்கலாம், அவர்களுக்கும் படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த சில வழிகள் உள்ளன. 

இதையும் படிங்க:  பெண் குழந்தைகள் விரைவில் பருவமடைய இதுவும் காரணமாம்.. சின்ன வயசுல இப்படியும் நடக்குமா?

படிப்பு மீது வெறுப்பு ஏன்? 

குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் வெறுப்பு ஏற்பட மூன்று காரணங்கள் உள்ளன. 

முதலாவது காரணம்: 

ஆர்வமின்மையே முதல் காரணம். சில பாடங்கள் அவர்களுக்கு போர் அடிக்கும். ஐந்து பாடங்களில் அனைத்து பாடங்களும் குழந்தைகளுக்கு பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில பாடங்கள் அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டாது. 

இரண்டாவது காரணம்:

குழந்தைகள் எளிதில் கவனச் சிதறல் அடைவது தான் இரண்டாவது. குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு படிப்பில் ஆர்வம் இல்லாத அளவுக்கு வேறு விஷயங்களில் கவனம் செல்லலாம். அது விளையாட்டு, டிவி, செல்போன் போன்றவையாக இருக்கலாம். 

மூன்றாம் காரணம்: 

குழந்தைகள் வளரும் சூழல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மோசமான சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தலாம். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதனால் பள்ளி செல்லவோ படிக்கவோ பயம் ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு வீட்டில் படிப்பதற்கான சூழல் இல்லாமல் போகலாம். இதனால் அவர்களுக்கு படிப்பை கண்டால் பயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

படிப்பின் மீது ஆர்வம் வரவழைக்க வழிகள்: 

குழந்தைகளுக்கு புத்தகங்களை பார்த்து படிக்க ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆனால் புதிய வழிகளில் அவர்களுக்கு கல்வியை அறிமுகப்படுத்தினால், நிச்சயம் பிடிக்கும். இன்றைய காலகட்டத்தில் எல்லோர் வீடுகளிலும் டெக்னாலஜி சாதனங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதை பயன்படுத்தி குழந்தைகளுக்கு புதிய முறையில் கற்றுக் கொடுக்கலாம். 

உதாரணமாக உங்களுடைய குழந்தை கணக்கு பாடத்தை படிக்க முடியாது என உங்களிடம் சொல்லினால், நீங்கள் அதை பாடமாக கற்றுக் கொடுக்காமல் விளையாட்டாக கற்றுக் கொடுக்கும் முயற்சியை செய்யலாம். இப்படி கற்றுக் கொடுப்பதற்கு பல செயலிகள் (app) இப்போது வந்துள்ளன. அதை பயன்படுத்தி குழந்தைகளை படிப்பை நோக்கி அழைத்து வரலாம். இலவசமான வீடியோக்கள் யூடியூபிலும் உள்ளன. 

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி,"பெற்றோர் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டே குழந்தைகளை படிக்கச் சொல்ல முடியாது" என சொல்லியிருப்பார். அதாவது வீட்டில் தொலைக்காட்சியை ஓட விட்டு விட்டு குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த சொல்லி நாம் கட்டாயப்படுத்த முடியாது. குழந்தைகள் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நாள் முழுக்க ஓயாமல் டிவி ஓடுவதும், செல்போன்களில் குழந்தைகள் கவனம் செலுத்துவதை கண்டிக்காமல் இருப்பதும் குழந்தைகள் படிப்பிலிருந்து விலகவே வாய்ப்பளிக்கும். வீட்டுப்பாடம் எழுத மொபைலை கையில் கொடுத்தால் அது தவிர அவர்கள் மற்ற எதையும் பார்க்காத வகையில்  கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் செல்போன் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். 

பெரியவர்களுக்கே ஒரே இடத்தில் ரொம்ப நேரம் அமர்ந்து ஒரு வேலையை செய்வது கடுப்பாக இருக்கும். இந்நிலையில் குழந்தைகளை ஒரே இடத்தில் இருக்கச் சொன்னால் அவர்கள் எப்படி அதை விரும்புவார்கள்.  குழந்தைகளை படிக்க சொல்லும்போது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு இடைவேளை கொடுப்பது நல்லது. இதனால் அவர்கள் படிக்கும் போது சோர்வடையாமல் சுறுசுறுப்பாக கற்றுக் கொள்வார்கள். படிக்கும்  ஆர்வம் தூண்டப்படும். 

குழந்தைகள் படிப்பதற்கு என தனி இடத்தை ஏற்பாடு செய்வது நல்லது. அவர்கள் கவனம் சிதறாத வகையில் அந்த இடம் இருக்கவேண்டும். குழந்தைகள் படிக்கும் இடத்தில் படுப்பதற்கு வசதியான படுக்கைகள் இருப்பதை தவிர்க்க வேண்டும். படிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அந்த சுற்றுப்புறம் அமைக்கப்பட வேண்டும். இந்த இடத்தை அவர்களுக்கு பிடித்ததை போலவே மாற்றியமைத்து கொடுங்கள். அப்படி இருந்தால் ஆர்வத்துடன் அமர்ந்து மணிக்கணக்காக படிப்பார்கள். 

படிப்பதற்கு என தனி நேரத்தை பழக்கப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் படிப்பதை உறுதி செய்யுங்கள். அப்படி பழகுவதால் படிப்பு அவர்கள் வாழ்க்கையின் அங்கமாகிவிடும். தொடர்ச்சியாக இதை செய்வதால் நீங்கள் சொல்லாமலே படிப்பதை விருப்பத்துடன் பழகிக் கொள்வார்கள். அவர்களுக்கு சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து ஊக்குவியுங்கள். அதை அடையும்போது அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை வரும். பிடிக்காத பாடத்தை படிக்கும்போது அவர்களை பாராட்டுங்கள். உதாரணமாக, அதை நன்றாக படித்தால் பிடித்த உணவை சமைத்து கொடுங்கள். 

தேர்வு நேரங்களில் அவர்களை உற்சாகப்படுத்த சிறிய பரிசுகளை வழங்குகள். பரிசுகள் அவர்களின் அத்தியாவசிய தேவையை பொறுத்ததாக இருந்தால் நல்லது. இதனால் அவர்களுக்கு மூளையில் டோபமைன் சுரந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் அந்த விஷயங்களை செய்ய தூண்டும். பிறகு அவர்களுக்கு பிடிக்காத பாடங்களே இருக்காது. நன்றாக படிப்பார்கள்.

Latest Videos

click me!