Interesting Facts: வேகமாகப் பாயும் ஆற்றுக்கு மேலே நாம் சுலபமாக பயணம் செய்கிறோம். ஆனால், அந்த உறுதியான பாலத்தை எப்படி கட்டுகிறார்கள்? இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்க என்ன காரணம்? இந்தக் கேள்விகளுக்கான சுவாரஸ்யமான பதில்கள் இங்கே.
நாம டிஜிட்டல் உலகத்துல வாழ்ந்தாலும், சில பொதுவான விஷயங்கள் பத்தின அறிவு நமக்கு இருக்காது. பல வருஷமா நாம பாலங்கள் மேல பயணம் செய்றோம். ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போக பாலம் ரொம்ப முக்கியம். ஆனா, கரைபுரண்டு ஓடுற ஆத்துக்கு நடுவுல எப்படி இவ்ளோ பெரிய தூண்களை நட்டு, பாலம் கட்டுறாங்கன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கோமா? பார்க்க சிம்பிளா இருந்தாலும், இதுக்குப் பின்னாடி பெரிய சவால்கள் இருக்கு. 'இன்னும் பாலம் கட்டி முடிக்கல'னு நாம சுலபமா குறை சொல்வோம். ஆனா, அதுல இருக்குற கஷ்டங்களையும், கட்டுமான முறைகளையும் பத்தி இப்போ பார்க்கலாம்.
வேகமாக ஓடும் ஆற்றின் நடுவில் தூண்களை அமைப்பது, இன்ஜினீயரிங் துறையிலேயே மிகவும் சவாலான வேலைகளில் ஒன்று. இதற்கு துல்லியம், தைரியம் மற்றும் நவீன தொழில்நுட்பம் தேவை. ஒரு சிறிய தவறு நடந்தாலும், பல மாத உழைப்பு வீணாகிவிடும். பாலம் கட்டும் முன், இன்ஜினீயர்கள் அந்த ஆற்றை முழுமையாக ஆய்வு செய்வார்கள். நீரின் ஆழம், ஆற்றுப் படுகையில் உள்ள மண்ணின் உறுதித்தன்மை, நீரோட்டத்தின் வேகம் ஆகியவற்றை அளவிடுவார்கள். இதன் அடிப்படையில், எத்தனை தூண்கள் தேவை என்பதை முடிவு செய்து, பாலத்திற்கான வடிவமைப்பை உருவாக்குவார்கள்.
ஆற்றுப் பாலங்களின் அஸ்திவாரம் அமைக்க 'காஃபர்டேம்' (Cofferdam) முக்கிய பங்கு வகிக்கிறது. இது, கட்டுமானப் பணிக்காக உலர்வான பகுதியை உருவாக்க உதவும் ஒரு தற்காலிக நீர்ப்புகா அமைப்பு. 10-20 மீட்டர் நீளமுள்ள ஸ்டீல் ஷீட்களை (Sheet Piles) கொண்டு இந்த காஃபர்டேம்கள் உருவாக்கப்படுகின்றன. ஹைட்ராலிக் சுத்தியல் அல்லது வைப்ரேட்டர்கள் மூலம் இந்த ஷீட்கள் ஆற்றுப் படுகையில் ஆழமாக பதிக்கப்படும். இந்த ஷீட்களை ஒன்றோடு ஒன்று இணைத்து வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்படும். இது, கட்டுமானப் பகுதிக்குள் தண்ணீர் வராமல் தடுக்கும்.
காஃபர்டேம் அமைத்த பிறகு, உள்ளே இருக்கும் தண்ணீர் பெரிய பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஆற்றுக்கே திருப்பி விடப்படும். இப்போது அந்த இடம் காய்ந்துவிடும். தொழிலாளர்கள் ஏணிகள் அல்லது கிரேன்கள் மூலம் அந்த உலர்வான பகுதிக்குள் இறங்கி, மணல், மண் மற்றும் கற்களை அகற்றுவார்கள். உறுதியற்ற மண்ணில் அஸ்திவாரம் அமைக்க, பாலத்தின் எடையைத் தாங்குவதற்காக 20-25 மீட்டர் நீளமுள்ள இரும்புக் குழாய்கள் ஆற்றுப் படுகையில் செலுத்தப்படும். பிறகு, அஸ்திவாரத்திற்காக கான்கிரீட் கொட்டப்படும். காற்றுக்குமிழ்களை நீக்கி, கட்டுமானம் உறுதியாகவும் நீண்ட காலம் உழைக்கவும் வைப்ரேட்டர்கள் பயன்படுத்தப்படும். இந்த முழு செயல்முறையும் மிகவும் ஆபத்தானது. காஃபர்டேமில் ஏற்படும் ஒரு சிறிய கசிவு அல்லது நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், மொத்த அமைப்பும் சரிந்துவிடும் அபாயம் உள்ளது.
இந்த வேலைகள் முடிந்ததும், இன்ஜினீயர்கள் 'கெய்சான்' (Caisson) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள். இவை நீர்ப்புகா பெட்டிகள் ஆகும். இவற்றை ஆற்றுப் படுகையில் மூழ்கடித்து, உள்ளே தொழிலாளர்கள் வேலை செய்ய உலர்வான பகுதியை உருவாக்குவார்கள். ஓபன் கெய்சான்களின் அடிப்பகுதியில் ஒரு துவாரம் இருக்கும், அது மூழ்குவதற்கு உதவும். நியூமேடிக் கெய்சான்கள், அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியே தள்ளும். தொழிலாளர்கள் ஏர்லாக் வழியாக இந்த அழுத்தப்பட்ட அறைக்குள் நுழைந்து வேலை செய்வார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.