
விலை குறையும் பொழுது அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைப்பது ஒரு விதத்தில் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி என்றாலும் நாம் வாங்கும் பொருட்களின் மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் குறையாமல் இருக்குமா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சில உணவுப் பொருட்களை நாம் மொத்தமாக வாங்கி குவித்து வைக்கும் பொழுது அதன் மருத்துவ குணம் மற்றும் சத்துக்களை இழக்க நேரிடும். எனவே அதிக அளவில் வாங்கி சேமித்து வைக்க கூடாத சில உணவுப் பொருட்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குடும்பத் தலைவிகள் மாதம்தோறும் போடும் வீட்டு பட்ஜெட்டில் முதலிடம் பிடிக்கிறது மளிகை சாமான்கள். மஞ்சள், சோம்பு, சீரகம், மிளகாய் என அனைத்து மசாலா பொருட்களும் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆனால் இந்த பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தன்னகத்தே சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை வைத்திருக்கும். நாட்கள் செல்ல செல்ல இவை தங்களது தன்மையை இழந்து விடும். எனவே இது போன்ற அஞ்சறைப்பெட்டி பொருட்களை தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ள வேண்டும். தீர்ந்து போன பிறகு மீண்டும் வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.
சமையலுக்கு தேவையான மற்றொரு முக்கியமான பொருள் எண்ணெய். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்று பல எண்ணெய்களை நாம் உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் எண்ணெய் வகைகள் மாதம் தோறும் விலையில் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றன. திடீரென தங்கம் விலை போல் எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே மக்கள் விலை குறையும் பொழுது லிட்டர் கணக்கில் வாங்கி சேமித்து வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாக இருக்கும் எண்ணெய் மக்கு வாடை ஏற்படுவதுடன் தன்மையையும் இழந்து விடும். எனவே 1-2 லிட்டர் அளவுகளில் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசியமான பொருட்களில் தற்போது தவிர்க்க முடியாமல் இருக்கிறது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள். பலரும் தங்களது உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்ப்பதற்காக பால் சார்ந்த பொருட்களான வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி ஆகிய பொருட்களை சாப்பிடுகின்றனர். ஆனால் இவை குறுகிய கால ஆயுட்காலம் கொண்டவையே. இந்த பொருட்களை அதிக அளவில் வாங்கி சேமித்து வைத்தல் கூடாது. இது நாளடைவில் சத்துக்களை இழந்து விடும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தேவைக்கு ஏற்ப தினமும் புதிதாக வாங்கி பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
காய்கறிகளின் விளையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தக்காளி விலை ஆப்பிளை போல உயர்ந்தது. இரண்டு மாத காலமாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது ரூ.20-க்கும் கீழாக குறைந்துவிட்டது. ஆனாலும் மக்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ மீண்டும் விலை உயர்வு ஏற்படலாம் என்கிற பயத்தில் அதிக அளவில் வாங்கி சேமித்து வைத்துக் கொள்கின்றனர். ஆனால் இது தவறான முறையாகும். காய்கறிகளை தினசரி தேவைக்கு ஏற்ப வாங்கி புதிதாக பயன்படுத்த வேண்டும். அப்போது தான் அதன் ஆரோக்கிய பலன்களைப் பெற முடியும். பழைய அல்லது வாடி வதங்கிய காய்கறிகள் பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை பயன்படுத்துதல் கூடாது. இந்த உணவுகளை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால இடைவெளி கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு காளான் போன்ற பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பொருட்களை முன்கூட்டியே வாங்கி ஸ்டோர் செய்து வைத்திருத்தல் கூடாது. தேவைக்கு ஏற்ப வாங்கி புதிதாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் பாதாம், பிஸ்தா போன்ற உலர் பருப்பு வகைகளையும், கோதுமை, சோளம் போன்ற போன்றவற்றின் மாவு வகைகளையும், பிரட் உள்ளிட்ட பேக்கரி ஐட்டங்களையும் வாங்கி சேமித்து வைத்தல் கூடாது. இதில் வண்டுகள், புழு, பூச்சிகள், பூஞ்சைகள் ஆகியவை வளரக்கூடும்.