
நவீன வசதிகள் என்ற பெயரில் நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் இயற்கையையும், உயிரினப் பன்முகத்தன்மையையும் அதிவேகமாக அழித்து வருகின்றன. இவை இயற்கையான பரிணாம வரிசையை விட 100 முதல் 1000 மடங்கு வேகமாக நிகழ்கின்றன. வளங்களின் அதிகப்படியான பயன்பாடு, மரங்களை வெட்டுதல், கடல்கள் மாசுபடுதல், மண் அரிப்பு, பூமி வெப்பமயமாதல் போன்றவை நமது பூமிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
மனிதர்களால் ஏற்பட்ட உயிரினப் பன்முகத்தன்மை இழப்பை ஈடுசெய்ய மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டைனோசர்கள் அழிந்த காலத்தை விட இப்போது மூன்று மடங்கு அதிகமான உயிரினங்கள் அழிந்து வருவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய மக்கள்தொகை 8 பில்லியனைத் தாண்டியுள்ளது. 2050ல் 9.6 பில்லியனாகவும், 2100ல் 11.1 பில்லியனாகவும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் வேலைக்குச் செல்வது, கல்வி, கடன் சுமை போன்ற காரணங்களால் குறைந்த குழந்தைகளையே விரும்புகின்றனர். ஆனால் வளரும் நாடுகள், குறிப்பாக சீனா, இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளன.
2017 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வளர்ந்த நாடுகளில் ஒரு குழந்தை பிறக்காமல் இருந்தால், வருடத்திற்கு 58 டன் கார்பன் உமிழ்வை குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதாவது, ஒரு நபருக்குத் தேவையான உணவு, மின்சாரம் போன்றவை குறையும் என்று பொருள். ஆனால் இது ஒரு நாட்டிற்கு மட்டும் அல்லாமல், உலகளவில் சமமாகப் பின்பற்றப்பட்டால் தான் பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மக்கள்தொகை குறைவது அவ்வளவு எளிதில் நடக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சுற்றுச்சூழலை நேசிப்பவர்கள் இல்லையென்றால், இயற்கையைப் பாதுகாக்கும் மதிப்புகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்பவர்கள் இருக்க மாட்டார்கள். இதனால் சுற்றுச்சூழல் பொறுப்பு குறையும். இது பூமிக்கு நல்லதல்ல என்ற வாதங்கள் உள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம் இறுதியில் சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீபன் டோவர்ஸ், கான்பெர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் காலின் பட்லர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிதாகக் குழந்தைகள் பிறக்கவில்லை என்றால், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அந்த நாட்டின் உழைப்பவர்களின் எண்ணிக்கைக் குறையும். வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வூதியத்தை நம்பியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சிக்கலான சூழ்நிலைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஜப்பானில் தற்போது இதுபோன்ற சிக்கலான சூழ்நிலைகள் உள்ளன.
மக்கள்தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல, அந்த மக்கள் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வாழ்க்கை முறையால் ஒரு நபருக்கு அதிக வளங்கள் செலவழிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளில் இது குறைவு.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குறைந்த வளங்களைப் பயன்படுத்தும் முறைகளைப் பின்பற்றி 4.7 - 5 ஹெக்டேர்களில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் கத்தார் போன்ற நாடுகளில் இது 15.7 ஹெக்டேர்களாக உள்ளது.