
எலும்புகள் தான் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம். வயது ஆக ஆக எலும்புகள் பலவீனமடைவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆனால் தற்போது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க நாம் சாப்பிட உணவில் கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இவற்றை நாம் நம்முடைய உணவில் சேர்க்காத போது எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைய தொடங்குகின்றது. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே உங்களது எலும்புகள் ஆரோக்கியத்தில் இருக்க முதலில் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். சரி இப்போது இந்த பதிவில் எலும்புகளை பலவீனப்படுத்தும் சில உணவுகளை குறித்து பார்க்கலாம்.
உப்பு உணவின் சுவையை அதிகரிக்கும். ஆனால் அதன் அதிகப்படியான நுகர்வு உடலில் கால்சியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றும். இதனால் கால்சியம் குறைபாட்டை ஈடு செய்வதற்காக எலும்புகளில் இருந்து கால்சியம் எடுக்கப்படுகிறது. இதன் விளைவாக எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பிரட், ஊறுகாய், சிப்ஸ் போன்ற உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு, லேசாக உப்பு சேர்க்கப்பட்ட வறுத்த நட்ஸ், மூலிகைகள் போன்றவை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கால்சியத்தை உடலிலிருந்து வெளியேற்றாமல் தக்க வைக்கும்.
சர்க்கரை எலும்புக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் கால்சியம் உறிஞ்சிதலை குறைத்து வீக்கத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இது உடலில் எலும்பும் திசுக்களை உருவாக்குவதையும் கடினமாக்கும்.
குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் மற்றும் அதிகப்படியான சர்க்கரை எலும்புகளை சீக்கிரமே பலவீனப்படுத்தும். எனவே கோலா போன்ற குளிர் பானங்களை குடிப்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை சாறு போன்றவற்றை குடிக்கலாம்.
டீ மற்றும் காபி இவை இரண்டிலும் காஃபின் உள்ளது. இவை உடலுக்கு புத்துணர்ச்சி அளித்தாலும் உடலில் இருந்து கால்சியத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகிறது. பாலுடன் காஃபியின் சிறிய அளவில் எடுத்துக்கொண்டால் எலும்புகளுக்கு எந்தவித தீங்குமில்லை. ஆனால் சர்க்கரை மற்றும் காஃபின் கலந்த எனர்ஜி பானங்கள் எலும்புகளுக்கு மோசமான தீங்கை விளைவுக்கும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆல்கஹால் எலும்புகளுக்கு மோசமான சேதத்தை விளைவிக்கும் மற்றும் இது உணவிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் டி-யை தடுக்கும். உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால் கால்சியம் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், உடலுக்கு கல்சியம் கிடைக்காது. அதுபோல அதிகப்படியான குடிப்பழக்கம் எலும்புகளை பலப்படுத்த உதவும் செல்களின் உற்பத்தியும் சேதப்படுத்தும்.
வெள்ளை ரொட்டி, பிஸ்கட் போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இவற்றில் மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற எலும்புகளை வலுப்படுத்தும் எந்தவித ஊட்டச்சத்துகளும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேடுகள் மட்டும்தான் உள்ளன. இவை வயிற்றை மட்டும் தான் நிரப்புகிறது. இதனால் ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் எலும்புகள் பலவீனமடைய தொடங்கும். எனவே இந்த உணவுகளுக்கு பதிலாக ஓட்ஸ், பிரவுன் அரிசி, முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.