
நமது வீடுகளில் குழம்பு வைப்பது துவங்கி சாதம் வடிப்பது வரை பெரும்பாலான சமையல் வேலைகள் ஸ்டீல் பாத்திரங்களிலேயே நடைபெறுகின்றன. பார்ப்பதற்கு அழகாகவும், துருப்பிடிக்காமலும், பளபளப்பாக இருக்கும் இந்த பாத்திரங்கள் சமையல் செய்ய ஏற்றது. ஆனால் இந்த ஸ்டீல் பாத்திரங்களில் சில உணவுப் பொருட்களை நீண்ட காலமாக சேமித்து வைக்க கூடாது என்று சமையல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பாத்திரங்கள் பாதுகாப்பானவை என்றாலும், குறிப்பிட்ட வகை உணவுகளை ஸ்டீல் பாத்திரங்களில் சேமிக்க கூடாது. சில உணவுகளில் உள்ள அமிலங்கள் ஸ்டீல் பாத்திரங்களில் உள்ள உலோகங்களுடன் வினைபுரிந்து உணவின் சுவையையும், தரத்தையும் மாற்றுவதுடன், சில நேரங்களில் பாத்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய உணவுகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் செய்யப்படும் ஊறுகாய்களில் எலுமிச்சை, மாங்காய், புளி மற்றும் வினிகர் போன்ற அதிக அமிலத்தன்மை கொண்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உப்பு மற்றும் எண்ணெய் அதிகமாக இருப்பதால் ஊறுகாய்களை அதிக நேரம் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கக் கூடாது. இது ஸ்டீல் பாத்திரத்துடன் தொடர்பு கொண்டு வினை புரியும் வாய்ப்பு உள்ளது. இது பாத்திரத்தின் நிறத்தை மாற்றுவதுடன், ஊறுகாயின் உண்மையான சுவையையும் புத்துணர்வையும் குறைத்து, உணவில் உலோகச் சுவையை ஏற்படுத்தலாம். எனவே ஊறுகாய்களை கண்ணாடி அல்லது பீங்கான் கொள்கலன்களில் சேகரிப்பதே சிறந்தது.
தயிர் இயற்கையிலேயே லாக்டிக் அமிலம் நிறைந்த ஒரு பொருளாகும். இதை ஸ்டீல் பாத்திரத்தில் நீண்ட நேரம் வைத்திருக்கும் பொழுது புளிப்பு தன்மை அதிகரித்து ஒருவித உலோகச் சுவை வரலாம். தயிர் தொடர்ந்து புளித்துக் கொண்டே இருப்பதால் அதன் அமைப்பு மற்றும் சுவை மாறக்கூடும். எனவே தயிரை உறை ஊற்றுவதற்கும், சேமிப்பதற்கும் பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரங்கள் பொருத்தமானவை. தயிர் மட்டுமல்லாமல் பாலாடை, பன்னீர், சீஸ் போன்ற பால் பொருட்களையும் ஸ்டீல் பாத்திரங்களில் நீண்ட நேரம் வைத்திருத்தல் கூடாது. இது உணவின் புரதத்தையும், பாக்டீரியாக்களையும் பாதிக்கலாம். இது ஸ்டீலுடன் வினைபுரிந்து உணவை கெட்டுப் போகச் செய்யலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசிப் பழம், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இந்த அமிலங்கள் ஸ்டீல் பாத்திரத்துடன் வினைபுரியும் பொழுது பாத்திரத்தில் அரிப்பு ஏற்படலாம். இதனால் பழங்கள் விரைவில் பழுப்பு நிறமாக மாறி அவற்றின் புத்துணர்ச்சி மற்றும் சுவை பாதிக்கப்படும். எலுமிச்சை சாதம், புளி சாதம், ரசம் போன்ற அமிலத்தன்மை வாய்ந்த உணவுகளுக்கும் இது பொருந்தும். அதேபோல் தக்காளி ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட சாஸ்கள், கிரேவி, தக்காளி சாதம், சட்னிகள் ஆகியவற்றையும் ஸ்டீல் பாத்திரத்தில் நீண்ட நேரம் சேமிப்பது நல்லதல்ல. இதனால் உணவில் உலோகச. சுவை கலந்து சுவையும், தரமும் கெடக்கூடும். இதற்கு மாறாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது நல்லது.
பூண்டு, வெங்காயம், இஞ்சி போன்ற வாசனை மிகுந்த உணவுகளை ஸ்டீல் பாத்திரங்களில் சேமிக்கும் பொழுது அவை பாத்திரத்தில் நாற்றத்தை விட்டுச் செல்லலாம். இது பாத்திரத்தை சுத்தம் செய்யும் பொழுதும் நீங்காமல் இருக்கலாம். அடுத்த முறை பயன்படுத்தும் பொழுது உணவின் சுவையையும் பாதிக்கலாம். எனவே வாசனை மிகுந்த உணவுகளையும் குங்குமப்பூ, மஞ்சள், மிளகு, மசாலா பொருட்கள், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளையும் ஸ்டீல் பாத்திரத்தில் சேமிக்கக் கூடாது. இது போன்ற உணவுகளை காற்று புகாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் சேமிக்கலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் போன்ற உலோகங்களின் கலவையாகும். குரோமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு அரிப்பு எதிர்ப்பு பண்பை அளிக்கிறது. நிக்கல் பாத்திரத்தில் கடினத் தன்மையும், நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கிறது.
தரமற்ற ஸ்டீல் பாத்திரங்களில் இந்த உலோகங்களின் விகிதம் சரியாக இல்லாத போது அல்லது நீண்ட நேரம் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் இந்த பாத்திரங்களில் சேமிக்கப்படும் பொழுது சிறிய அளவு உலோகத் துகள்கள் உணவில் கலக்க வாய்ப்பு உள்ளது. இது உணவின் சுவை, வாசனை மற்றும் நிறத்தை பாதிக்கலாம். இறுதியாக உணவுப் பொருட்களை ஸ்டீல் பாத்திரங்களில் சேமிப்பது பொதுவாக பாதுகாப்பானது தான் என்றாலும், மேலே குறிப்பிடப்பட்ட அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகளை கண்ணாடி பீங்கான், மண் பாத்திரங்கள் அல்லது உணவுக்காக வடிவமைக்கப்பட்ட நல்ல தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களில் சேமிப்பதே முறையாகும். இது உணவின் சுவையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.