மார்கழி மாத விசேஷ நாட்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு நைவேத்தியம்! வழக்கமான சர்க்கரைப் பொங்கலிலிருந்து மாறுபட்ட மனமும் தளதளப்பான பதமும் கொண்ட கோவில் பிரசாத சுவையை வீடே மணக்க சுலபமாக செய்ய உதவும் ரகசிய டிப்ஸ் இதோ!
ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற திவ்ய தேசங்களில் மார்கழி மாதங்களிலும், விசேஷ நாட்களிலும் இறைவனுக்குப் படைக்கப்படும் மிக உன்னதமான நைவேத்தியங்களில் 'அக்காரவடிசல்' முதன்மையானது. பார்க்கச் சர்க்கரைப் பொங்கல் போலத் தோன்றினாலும், தண்ணீரே சேர்க்காமல் முழுக்க முழுக்க நெய்யிலும் பாலிலும் மட்டுமே வெந்து பதமாகத் தயாராவதால் இதன் சுவையும் மணமும் அலாதியானது. வழக்கமான முறையில் செய்யாமல், அக்ரகாரத்து வீடுகளில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் பாரம்பரிய கைபக்குவத்துடன், ஆறினாலும் கெட்டியாகாமல் நாவில் கரையும் மிருதுவான அக்காரவடிசல் எளிதாகச் செய்வது எப்படி என்று வாங்க தெரிந்து கொள்ளலாம்.
210
அரிசி - பருப்பு வறுக்கும் பதம்:
நல்ல தரமான பச்சரிசியுடன் (1 கப்), பாசிப்பருப்பை (2 டேபிள் ஸ்பூன்) சேர்த்து நெய்யில் லேசாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். அரிசி நிறம் மாறக் கூடாது. அதன் பச்சை வாசனை போய் லேசான நறுமணம் வந்தால் போதுமானது.
310
பாலில் குழைய வேகவைத்தல்:
இச்செயல்முறையின் மிக முக்கியமான ரகசியமே இதில் சொட்டு நீர் கூடச் சேர்க்கக் கூடாது என்பதுதான். வறுத்த அரிசி மற்றும் பருப்பை, 4 கப் கெட்டியான பசும்பாலில் குக்கரில் மிதமான தீயில் 5 முதல் 6 விசில் விட்டு நன்றாகக் குழைய வேக வைக்க வேண்டும்.
1.5 கப் கெட்டியான உருண்டை வெல்லத்தை மிகக் குறைந்த பாலில் கரைத்து, தூசிகள் நீங்க வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்லப் பாகு கம்பிப் பதம் வரத் தேவையில்லை; வெல்லம் முழுமையாகக் கரைந்து சூடானால் போதுமானது.
510
பாகு மற்றும் பாலின் சேர்க்கை:
வெந்து குழைந்துள்ள அரிசி-பருப்பு கலவையை நன்றாக மசித்து, அதனுடன் வடிகட்டிய வெல்லப் பாகைச் சேர்க்க வேண்டும். இதனுடன் மேலும் 1 கப் சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளற வேண்டும்.
610
நெய் மிதக்கும் பதம்:
கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது, அரை கப் சுத்தமான பசு நெய்யைச் சிறுகச் சிறுகச் சேர்த்துக் கிளற வேண்டும். அரிசியும் வெல்லமும் பாலோடு ஒன்றிணைந்து பளபளப்பான பொன்னிறப் பதத்திற்கு வர வேண்டும்.
710
நறுமணப் பொருட்களின் ரகசியம்:
ஏலக்காய்த்தூள் (அரை ஸ்பூன்), ஒரு சிட்டிகை சாதிக்காய்த்தூள் மற்றும் விரல் நுனியால் தொடும் அளவிற்கு மிகச் சிறிய அளவிலான பச்சைக்கற்பூரம் சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை கல்உப்பு தூவினால் இனிப்பு சுவை தூக்கலாக மாறும்.
810
முந்திரி, திராட்சை & குங்குமப்பூ வறுவல்:
தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சையுடன் லேசாகக் கசக்கிய குங்குமப்பூவைச் சேர்த்து வறுத்து, அக்காரவடிசலில் கொட்டிக் கிளற வேண்டும்.
910
இறுதிப் பதம்:
அக்காரவடிசல் பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாமல், நெய் லேசாக மிதந்து தளதளவென இறக்கும் பதத்தில் இருக்க வேண்டும். ஆறினாலும் இறுகிவிடாமல் தளதளவென்றே இருப்பதுதான் இதன் சிறப்பு.
1010
ருசிகரமான டிப்:
சமைத்து முடித்து அடுப்பை அணைத்த பிறகு, அரை ஸ்பூன் காய்ச்சாத பசும்பால் ஊற்றி, மூடி வையுங்கள். 10 நிமிடங்கள் கழித்துப் திறந்தால் அக்ரகாரத்து வீடுகளுக்கே உரித்தான அந்தத் தனித்துவமான திவ்ய வாசனை வீடு முழுதும் கமழும்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.