
நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய எளிமையான பயிற்சி தான் நடைபயிற்சி. இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு எவ்வித உபகரணங்களும் தேவையில்லை. செலவில்லாமல் வீட்டிலேயெந் கூட செய்யலாம். உங்களிடம் கொஞ்சம் நேரம் மட்டும் இருந்தால் மட்டும் போதும். பல நோய்களிலிருந்து வாக்கிங் செல்வது உங்களை காப்பாற்றும்.
உங்களுடைய உடலையும் நல்ல வடிவமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அமெரிக்காவை சேர்ந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்களாவது ஏரோபிக் பயிற்சிகளை (Aerobic Exercises) செய்ய அறிவுறுத்துகிறது. எடையை குறைக்க உதவும் இந்த பயிற்சிகள் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
ஏரோபிக் பயிற்சிகளில் நடைபயிற்சியும் அடங்கும். தினமும் 30 நிமிடம் நடந்தால் கூட ஐந்து நாட்களில் 150 நிமிடங்கள் நடைபயிற்சியை எளிதாக செய்யலாம். ஆனால் நடைபயிற்சியை முறையாக செய்வதால் மட்டுமே அதன் முழுப்பலன்களை அனுபவிக்க முடியும். நடைப்பயிற்சியின் போது நாம் செய்யும் சில தவறுகளால் அதன் பலன்களை நாம் முழுமையாக பெறமுடிவதில்லை.
சில நேரங்களில் நடைபயிற்சியை முறையாக செய்யத் தவறும் போது அவை காயங்களை கூட ஏற்படுத்தலாம். நடைபயிற்சி செய்யும்போது நாம் செய்யும் சில பொதுவான தவறுகளையும், அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: பவர் வாக் பற்றி தெரியுமா? உடல் எடையை குறைக்க இந்த 'வாக்கிங்' முறை தான் சிறந்தது!!
தோரணை:
உதாரணமாக, நீங்கள் நடை பயிற்சி செய்யும்போது செல்போனை பயன்படுத்துவது உங்களுடைய கவனத்தை சிதறடிக்கும். இதனால் உங்களுடைய தோரணை (posture) மாறலாம். பொதுவாம எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் சரியான தோரணையில் செய்வதுதான் நல்ல பலன் தரும். நடைப்பயிற்சியின் போது உங்களுடைய தோரணை அடிக்கடி மாறுவது தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை கூட ஏற்படுத்தக்கூடும்.
செல்போன் பயன்படுத்திக் கொண்டு நடப்பது உங்களுடைய உடலின் சமநிலையை மாற்றுகிறது. இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே நீங்கள் நடைபயிற்சி செய்யும் போது செல்போனை பார்க்காமல் நிமிர்ந்த தோற்றத்துடன் சுறுசுறுப்பாகக் கைகளை வீசி நடப்பது அவசியம்.
சரியான காலணி:
உங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது சரியான காலணிகளை அணிவது அவசியம். ஏனென்றால் பொருத்தமற்ற காலணிகளை அணிவது கால்களில் வலியை ஏற்படுத்தலாம். சிலருக்கு கொப்புளங்கள், கால் வலி போன்றவை வரலாம். குஷனிங் இல்லாத காலணி அல்லது ஷூ அணிந்தால் மூட்டு வலி, பாதங்களில் வேதனை உண்டாகலாம். பொருத்தமான ஷூ அணிந்து நடந்தால் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. கால்களும் பிற காயங்களிலிருந்து பாதுகாக்கப்படும்.
இதையும் படிங்க: உங்க வயசுக்கு தினமும் 'எத்தனை' நிமிடங்கள் நடக்கனும் தெரியுமா?
நீரேற்றமாக இருங்கள்:
நடை பயிற்சி மேற்கொள்ளும் போது உடம்பில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. சுறுசுறுப்பாக ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டால் வியர்வை நன்கு வெளியேறும். இதனால் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நமது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு காரணமாகிவிடும். அதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.
இதற்கு அதிகளவில் தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது. உடலில் நீரிழப்பு ஏற்பட்ட பின்னர் நீரேற்றமாக இல்லாவிட்டால் இரத்த ஓட்டம் பாதிக்கும். நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்பாகவும் நடந்து முடித்த பிறகும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நடைபயிற்சி செல்லும் போது உங்கள் கைகளில் தண்ணீர் கொண்டு செல்வது நல்லது.
எப்படி நடக்க வேண்டும்?
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது கால்களை தூக்கி வைத்து நடக்க வேண்டும். தரையில் கால்களை தேய்த்தப்படி, சாய்ந்த நிலையில் நடக்கக்கூடாது. இப்படி செய்வதால் உடல் நன்றாக இயங்காது. நிமிர்ந்தபடி நேராக பார்த்துக் கொண்டு நடக்க வேண்டும். தோள்கள் தளர்வாக, கைகள் முன்னும் பின்னும் செல்லும் வண்ணம் நடக்கவேண்டும். ஒருபோதும் தரையை பார்த்தபடி நடக்கக்கூடாது. உங்களுடைய உடலை சரியான வடிவத்தில் வைத்து நடக்காமல் அலட்சியமாக நடைபயிற்சி மேற்கொண்டால் தசைப்பிடிப்பு, மூட்டு வலி முதுகு வலி போன்றவை வரலாம்.
ஏன் சரியான தோரணை அவசியம்?
நடைபயிற்சி நம்முடைய கால்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் சரியான முறையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது தொடைப் பகுதி வலுவாகிறது. மூட்டுகள் உறுதியாகின்றன. ஆனால் சரியான தோரணையை கடைபிடிக்காமல் அலட்சியமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மூட்டுகளும், தசைகளும் பாதிப்பை சந்திக்கின்றன.
இதனால் கழுத்து, முதுகில் வலி ஏற்படுகிறது. எப்போதும் தளர்வான தோள்கள் விரிந்த மார்பு நிமிர்ந்த தோற்றத்தில் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்த பலன்களை பெற்றுத் தரும். நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் கைகளை கண்டிப்பாக வீசியபடி நடக்க வேண்டும். நடைபயிற்சிக்கு முன்பும் பின்பும் ஸ்ட்ரெச்சிங் செய்வது அவசியமாகிறது. இது உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும்.