பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சித்தார்த்த் மல்கோத்ராவும், கியாரா அத்வானியும், பல ஆண்டுகாலம் காதலில் திளைத்தவர்கள். இவர்கள் இருவரது காதலுக்கும் குடும்பத்தினர் பச்சை கொடி அசைக்க, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி கியாரா அத்வானியை குடும்பத்தினர் முன்னிலையில் கரம்பிடித்தார் சித்தார்த் மல்கோத்ரா.
இவர்களது திருமணம் கோலாகலமாக ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். சித்தார்த் - கியாராவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்தன. அதில் கியாராவின் உடைகள் தான் அதிகம் பேசப்பட்டது. கண்ணை கவரும் வகையில் அவர் அணிந்திருந்த அந்த ஆடைகளின் வடிவமைப்பு குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
கியாரா தனது சங்கீத் நிகழ்வில் அணிந்திருந்த ஒம்ப்ரே (ombre) லெஹங்கா அட்டகாசமான தோற்றத்தில் இருந்தது. இதனை மணீஷ் மல்ஹோத்ரா பிரத்யேகமாக வடிவமைத்திருந்தார். ஜொலிக்கும் அதன் தோற்றம் சாதாரணமாக வந்துவிடவில்லை. கிட்டத்தட்ட 98 ஆயிரம் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் அந்த லெஹங்காவில் வைத்து தைக்கப்பட்டிருந்தன.
இந்த லெஹங்கா குறித்து டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து கொண்டார். கியாரா அத்வானி அணிந்திருந்த அந்த லெஹங்காவை முடிக்க சுமார் 4 ஆயிரம் மணிநேரம் (24 வாரங்கள்) எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சித்தார்த்தின் ஆடையும் அதற்கு சளைத்தது அல்ல. அவருடைய ஷர்வானி கூட படிகங்களால் ஆன வேலைப்பாடுகளுடன் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கியாரா அத்வானியின் அழகான தோற்றத்தை முழுமையாக்க, மணீஷ் மல்ஹோத்ரா லெஹங்காவுடன், சில நகைகளையும் தேர்ந்தெடுத்துள்ளார். கியாரா அணிந்திருந்த நெக்லஸ் மிக சிறப்பு வாய்ந்த ரூபி வைரங்களால் ஆனது.