
கதண்டு என்பது தேனீ, குளவி போன்ற பூச்சிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகையான பூச்சி இனமாகும். இது பெரிய அளவிலும், பழுப்பு நிறத்திலும் அதிக நச்சுத்தன்மையுடனும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் அடர்ந்த காடுகள், மரப்பொந்துகள், பழைய கட்டிடங்களில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டது. கிராமப்புறங்களில் இதனை பெரிய குளவி என்று அழைக்கின்றனர். இவை தேனீயைப் போலவே தோன்றினாலும் இது தேனீ கிடையாது. இவை ஒருவகை விஷ வண்டுகள் ஆகும். தேனீக்களின் கொடுக்குகள் ஒருமுறை கொட்டி விட்டால் வலிமை இழந்து விடும். ஆனால் கதண்டுகளின் கொடுக்குகள் மிகவும் வலிமையானது. அவை திரும்பத் திரும்ப கொட்டக்கூடியவை. ஒவ்வொரு கொட்டிலும் வெளியாகும் விஷமானது மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும்.
கதண்டுகள் கடித்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதன் விஷத்தன்மை மற்றும் அதனால் உடலில் ஏற்படும் எதிர் வினைகள் ஆகும். கதண்டின் விஷத்தில் ஃபார்மிக் அமிலம் மற்றும் பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இந்த விஷமானது நரம்பு மண்டலத்தை தாக்கி கடுமையான வலியை ஏற்படுத்தும். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை அழிக்கும் திறனும் கொண்டுள்ளது. கதண்டுகளின் விஷத்தில் பாஸ்போலைபேஸ் ஏ1 மற்றும் மாஸ்டோபரன் என்ற இரண்டு முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை இரண்டும் அதிக நச்சுத்தன்மை கொண்டவை. இவை உடலுக்குள் செல்லும் பொழுது எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. இந்த விஷம் சில சமயங்களில் உடலின் பாதுகாப்பு அமைப்பை தூண்டி ஹிஸ்டமைன் போன்ற வேதிப்பொருட்களை உடலில் அதிக அளவில் உற்பத்தி செய்ய வைக்கின்றன.
இதன் காரணமாக உடலில் திடீரென அலர்ஜி ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமையின் உச்சகட்ட நிலையான அனாஃபிலாக்சிஸ் எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் உடல் முழுவதும் கடுமையான வீக்கம் ஏற்படும். மூச்சுக்குழாய் சுருங்குவதால் மூச்சுத் திணறல் ஏற்படும். ரத்த அழுத்தம் திடீரென குறைந்துவிடும். இதனால் இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உயிரிழப்பு ஏற்படலாம். கதண்டின் விஷமானது ரத்தத்தின் சிவப்பணுக்களை அழித்து விடுவதால் அவை சிறுநீரகங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரகங்கள் செயலிழக்க நேரிடும். சிறுநீரக செயலிழப்பு என்பது சில நாட்கள் அல்லது சில மணி நேரங்களில் கூட உயிரிழப்பை ஏற்படுத்தும். கதண்டின் விஷம் நரம்பு மண்டலத்தை கடுமையாக தாக்குவதால் வலிப்பு, மயக்கம், பக்கவாதம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
கதண்டு கடித்த உடன் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட விட்டால் மரணம் கூட ஏற்படலாம். கதண்டு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அது ஒன்றே உயிரை காப்பாற்றும் வழி. கண்களைச் சுற்றி வீக்கம், உதடுகள், முகத்தில் ஏற்படும் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், குரலில் மாற்றம், உடல் முழுவதும் வீக்கம் அல்லது தடிப்புகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும். மருத்துவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில், கதண்டு கொட்டிய இடத்தில் கொடுக்கு இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும். கொட்டிய இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். வலியை குறைக்க ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும். மஞ்சள் மற்றும் வேப்பிலை போன்ற பொருட்களை கதண்டுகள் கொட்டிய இடத்தில் தடவலாம். பெரிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் கூறியுள்ள அவர் அனாஃபிலாக்சிஸ் என்கிற ஒவ்வாமையை தடுப்பதற்கு எபிபென் என்கிற ஊசியை வீட்டில் எப்போதும் வைத்து இருக்கலாம். இதை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக ஆடி மாதங்களில் இந்த கதண்டுகள் குறித்த செய்திகள் அதிகம் பரவுவதற்கு காரணம் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கதண்டுகள் பெரிய அளவில் கூடு கட்டி இருக்கும். எனவே இவை உணவுக்காக ஆக்ரோஷமாக அலையும். இந்த காலங்களில் தோட்டங்கள், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டைச் சுற்றி குப்பைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பின் தெரியாத காட்டுப்பகுதிகளுக்கோ அல்லது பிற இடங்களுக்கோ செல்லக்கூடாது. வேப்ப மரங்கள், துளசி செடிகள் ஆகியவற்றை வீட்டைச் சுற்றி வளர்ப்பதன் மூலமாக இந்த கதண்டுகளை இயற்கையாக விரட்டலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
கதண்டுகள் பொதுவாக விஷத்தன்மை கொண்ட ஒரு பூச்சிகளாகும். ஒரு கதண்டு கடித்தால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உயிரிழப்பு ஏற்படாது. அதே சமயம் பல கதண்டுகள் சேர்ந்து ஒரே நேரத்தில் தாக்கினால் உடலில் சேரும் விஷத்தின் அளவு அதிகரித்து மேற்கூறிய அனைத்து விளைவுகளும் ஒரே நேரத்தில் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனவே ஒரு கதண்டு கடித்தாலோ அல்லது பல கதண்டுகள் கடித்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம். சிறு அலட்சியம் கூட மரணத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.