
எடை குறைக்க நினைத்தால் அதற்கு நடைபயிற்சி எளிமையான மற்றும் அவசியமான உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். அனைத்து வயதினரும் செய்ய தகுந்த மிதமான பயிற்சி என்றால் அது நடைபயிற்சிதான். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் நாள்தோறும் நடப்பது நல்ல பலன்களை தரும். ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நடப்பது அவர்களுடைய நோய்களை கட்டுக்குள் வைக்க உதவும். இதுவரை நீங்கள் நடைபயிற்சி செய்யாவிட்டாலும் இனிமேல் செய்ய தொடங்கலாம். புதியதாக நடக்க ஆரம்பிப்பவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
நீங்கள் புதியதாக நடக்க தொடங்கி இருந்தால் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது காயங்கள் ஏற்படாமல் இருக்க, எலும்பு தேய்மானத்தை தவிர்க்க நல்ல காலணிகளை அணிவது அவசியம். நீங்கள் நடக்கும் பரப்பு கரடு முரடாக இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். முதலில் சிறிய அளவில் நடக்கத் தொடங்க வேண்டும். அதாவது குறைந்த தூரம், குறைந்த நேரம் என பயிற்சியை தொடங்கி பின்னர் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். நடைபயிற்சி பொருத்தவரை ஒரே நாளில் நீங்கள் மொத்த பலன்களையும் அடைய முடியாது. தொடர்ச்சியாக நடைபயிற்சி செல்வதே பலன்களை பெற்று தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: மாரடைப்பு வராமல் தடுக்க பெண்கள் 'எத்தனை' காலடிகள் நடக்கனும்?
- உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுவதோடு உங்களுடைய இதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.
- தினமும் நடைபயிற்சி செய்தால் உங்களுடைய மூட்டுகள் உறுதியாகும். உடலின் ஒவ்வொரு தசைகளும் வலுப்பெறும். உடலின் நெகிழ்வுத் தன்மையை பராமரிப்பதற்கு உதவும்.
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) கூற்றின்படி, நாம் நடக்கும்போது மனநிலை மேம்படுகிறது. நீங்கள் மனச்சோர்வுடன் காணப்பட்டால் நடப்பது உங்களுடைய மனநிலையை சீராக்க உதவும்.
இதையும் படிங்க: காலைல தண்ணீர் குடிக்கலாம்.. ஆனா வாக்கிங் போறப்ப தண்ணீர் குடிக்கலாமா?
1). நீங்கள் நடைபயிற்சியை தொடங்குவதாக இருந்தால் சரியான ஷூ அல்லது காலணியை தேர்ந்தெடுப்பது அவசியம். நன்கு மெத்தை போன்ற அதாவது குஷனிங் கொண்டுள்ள ஷூ அல்லது காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இது உங்களை தேவையில்லாத கொப்புளங்கள், காயங்களில் இருந்து தற்காக்கும்.
2). நடைபயிற்சி மேற்கொள்ளும் போது வியர்வையை உறிஞ்சும் வகையிலான மென்மையான துணிகளை அணிவது அவசியம். காற்றோட்டமான மென்மையான உடைகளை அணிந்து நடப்பது ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
3). நடக்கும்போது தொண்டை வறட்சியை தடுக்க, அதிக வியர்வை வெளியேற்றத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க முன்தயாரிப்போடு இருக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் பாட்டிலை கூடவே கொண்டு செல்லுங்கள்.
4). நீங்கள் நடைபயிற்சியை முதல் முதலாக இப்போதுதான் செய்யத் தொடங்கியவர் எனில் வாரத்திற்கு 3 முதல் 4 முறை நடக்கலாம். ஒரு நாளில் 10 முதல் 15 நிமிடங்கள் எனத் தொடங்கி மெல்ல நேரத்தை அதிகரிக்கலாம். ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரியுங்கள்.
5). சூரிய ஒளி உடலுக்கு அவசியம். அதனால் காலை அல்லது மாலை வெயிலில் நடக்கச் செல்லுங்கள்.
6). நடக்கும் விதம் மற்றும் உங்களுடைய தோரணையை கவனத்தில் கொள்ளுங்கள். சரியான தோரணையில் நடப்பது உடலுக்கு உறுதியையும் நடைபயிற்சியின் நன்மைகளையும் முழுமையாக பெற உதவும்.