Varicose Veins: இந்திய மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதவீதம் பேர் வெரிகோஸ் வெயின் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்களில் ஏற்படும் திடீர் வலி, வீக்கம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்தியாவில் நிறைய பேர் சந்திக்கிற ஒரு பொதுவான பிரச்சனைதான் வெரிகோஸ் வெயின் (varicose veins). நம்மில் பலர் இதை பரம்பரை வியாதி என்றோ அல்லது வயதாவதால் வருவது என்றோ நினைத்து அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால், இந்த நிலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெரிகோஸ் வெயின் என்பது, சருமத்திற்கு வெளியே தெரியும் அளவுக்கு நரம்புகள் புடைத்து, சுருண்டு காணப்படும் ஒரு நிலை. இந்த நரம்புகள் நீலம் அல்லது ஊதா நிறத்தில், பின்னப்பட்ட கயிறு போல தோற்றமளிக்கும். உடலின் எந்தப் பகுதியிலும் இது வரலாம் என்றாலும், கால்களில்தான் இது பொதுவாகக் காணப்படுகிறது. வெரிகோஸ் வெயின்களின் ஒரு வகையான 'ஹெமராய்ட்ஸ்' கர்ப்ப காலத்தில் பெண்களின் மலக்குடல் அல்லது பிறப்புறுப்பைச் சுற்றி ஏற்படலாம்.
இந்தியாவில் 25 முதல் 30 சதவீதம் பேருக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சனை
இந்தியாவில் சுமார் 25 முதல் 30 சதவீதம் பேர் வெரிகோஸ் வெயின் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கால்களில் திடீரென ஏற்படும் வலி மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர். சரியான நேரத்தில் நோயைக் கண்டறிய 'டாப்ளர் அல்ட்ராசவுண்ட்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
சிகிச்சை அளிக்காமல் விட்டால், நோய் அடுத்த கட்டத்திற்குச் சென்று, சருமத்தின் நிறம் மாறத் தொடங்கும். கால்கள் கருப்பாக மாறி, அதில் புண்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் விட மிக மோசமான ஆபத்து என்னவென்றால், கால்களில் உள்ள நரம்புகளில் ரத்தம் உறைந்து (clots), அந்த கட்டிகள் இதயம் வரை சென்று உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.
அதனால், ஆரம்பத்திலேயே 'டாப்ளர்' எனப்படும் பரிசோதனையைச் செய்வது அவசியம். இது ஒரு சாதாரண அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன்றதுதான். இதன் மூலம், ரத்தம் ஓரிடத்தில் தேங்கியிருக்கிறதா இல்லையா என்பதை மிக எளிதாகக் கண்டறிய முடியும். வயது மற்றும் செய்யும் தொழிலைப் பொறுத்து இதன் பாதிப்பு மாறுபட்டாலும், ஆய்வுகளின்படி, ஒவ்வொரு நான்கு பெரியவர்களில் ஒருவருக்கு வெரிகோஸ் வெயின் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறைத் தலைவரும், சீனியர் கன்சல்டன்டுமான டாக்டர். அபிஷேக் பன்சால் கூறும்போது, "பெண்கள், வயதானவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் மற்றும் நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது" என்றார்.