
நீரிழிவு நோயாளிகள் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவரை சந்தித்து இரத்தப் பரிசோதனைகள் மேற்கொண்டு, இரத்த சர்க்கரையின் அளவுக்கு ஏற்ற வகையில் மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியது அவசியம். வழக்கமான பரிசோதனைகளுக்கு முந்தைய நாளே நீரிழிவு நோயாளிகள் தயாராகி விடுவர். சர்க்கரை இல்லாமல் டீ குடிப்பது, முதல் நாள் மட்டும் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். ஆனால் இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் முறையாகும். இரத்த சர்க்கரை அளவு சரியாக தெரிந்தால் மட்டுமே அதற்கான மருந்துகளை மருத்துவர்கள் சரியான முறையில் பரிந்துரைக்க முடியும். எனவே நீரிழிவு நோயாளிகள் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு முன்னர் செய்யக்கூடாத மூன்று தவறுகள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்கு முன்பு (Fasting), உணவு உண்ட 2 மணி நேரத்துக்கு பின்பு (Postprandial) என இரண்டு முறை ரத்தம் கொடுக்க வேண்டியது வரும். வெறும் வயிற்றில் இரத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பலர் தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடப்பர். இது தவறான முறையாகும். செரிக்கக்கூடிய வகையிலான உணவுகளை சாப்பிடாமல் போக வேண்டுமே தவிர, தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. தண்ணீர் மட்டுமல்ல சர்க்கரை சேர்க்காத பிளாக் டீ, கிரீன் டீ, பிளாக் காபி ஆகியவற்றை கூட எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் டெஸ்ட் எடுப்பதற்கு அரை மணி நேரம் முன்பு தண்ணீர் குடிப்பது நல்லது. அது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால் நரம்புகள் எளிதில் வெளியில் தெரியும். இரத்தம் இலகுவாகவும் எடுக்க முடியும்.
சாப்பிடுவதற்கு முன்பு இரத்தம் கொடுத்து விட்டு உணவுக்குப் பின் 2 மணி நேரம் கழித்து ரத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் இரண்டாவது டெஸ்ட் எடுப்பதற்கு முன்பாக சிலர் வழக்கமாக போட வேண்டிய மருந்து மாத்திரையை போடுவதில்லை. மாத்திரை போடாமல் டெஸ்ட் எடுத்தால் எவ்வளவு சுகர் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக சிலர் இதுபோல செய்கின்றனர். ஆனால் இது தவறான முறையாகும். உணவு அருந்திய பின்னர் வழக்கமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு 1.5 மணி நேரத்திற்கு பிறகு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உணவு நம் உடலில் சென்று அது குளுக்கோஸ் ஆக மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்க ஒரு மணி நேரம் தேவைப்படும். எனவே 1.5 மணி நேரம் முதல் இரண்டு மணி நேரத்திற்குள் இரத்தம் கொடுத்துவிட வேண்டும்.
மூன்றாவது தவறு முதல் நாள் இரவு தாமதமாக சாப்பிடுவது. எடுத்துக்காட்டிற்கு நீங்கள் மறுநாள் காலை 6 மணிக்கு ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். முதல் நாள் உணவை மிகவும் கட்டுப்படுத்துதல் கூடாது. வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி என அந்த உணவுகளையே சாப்பிட வேண்டும். முதல் நாள் இரவு எண்ணெயில் பொரித்த உணவுகள், பூரி, அரிசி சாதம், பரோட்டா போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி ஒரு வேலையை சாப்பிட்டு விட்டீர்கள் என்றால் அடுத்த நாள் டெஸ்ட்டுக்கு போக வேண்டாம். மீறி சென்றால் கண்டிப்பாக அதிகமாகத் தான் காட்டும். அதேபோல் இரவு உணவுக்கு பின்னர் எடுக்க வேண்டிய மாத்திரைகளை சரியாக எடுத்துவிட்டு அடுத்த நாள் டெஸ்ட்க்கு செல்ல வேண்டியது அவசியம்.
எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் முதல் நாள் இரவு 7 மணி அளவில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். வழக்கமான சாப்பாட்டை சாப்பிடலாம். அதிக கட்டுப்பாடு வேண்டாம். முதல் நாள் வேண்டுமென்றே மிகக் குறைவான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அதே சமயம் அதிக அளவிலான உணவையும், துரித உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். முதல் நாள் இரவு சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை 8 மணிக்கு இரத்த பரிசோதனை மேற்கொள்வது நல்லது. எட்டு மணிக்கு வெறும் வயிற்றில் இரத்தம் கொடுத்த பிறகு சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 10 மணிக்கு இரண்டாவது பிளட் சாம்பிள் கொடுக்க வேண்டும். அப்போது ரிசல்ட் மிக துல்லியமாக இருக்கும்.
முதல் நாள் இரவு ஹெவியாக சாப்பிட்டு விட்டு செல்வது, மருந்து மாத்திரைகளை முறையாமல் எடுக்காமல் செல்வது உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் இரத்த மாதிரி கொடுப்பதற்கு முன்னர் மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது ஆகிய செயல்களில் கண்டிப்பாக ஈடுபடுதல் கூடாது. இந்த தவறுகளை சரி செய்து விட்டாலே உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு மிகத் துல்லியமானதாக வரும். அடுத்த முறை இரத்த பரிசோதனைக்கு செல்வதற்கு முன்னர் இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றிப் பாருங்கள்.