
புற்றுநோய் சிகிச்சையில் தற்போது முன்னேற்றங்கள் வந்துள்ளன. ஆனாலும் அது ஆபத்தான கொடிய நோயாகவே கருதப்படுகிறது. புற்றுநோய் மரபணுரீதியாக வரலாம். உடல் பருமன், நீரிழிவு நோய், மோசமான உணவு பழக்கம் போன்றவையும் இதற்கு காரணமாகின்றன. ஆனால் புற்றுநோய் வரும்முன் தடுக்க சில உணவுகள் உள்ளன. அவற்றை உணவில் சேர்த்து கொள்வதால் புற்றுநோயைத் தடுக்க முடியும்.
ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், காலே ஆகியவை ஆற்றல்வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகளாகும். இதில் உள்ள சல்ஃபோராபேன் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. வீக்கத்தைக் குறைக்கும் பண்பு கொண்டது. இது புற்றுநோய் செல்களுடைய வளர்ச்சியைக் கூட தடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இதனை தொடர்ந்து சாப்பிட்டால் மார்பகம், புரோஸ்டேட், பெருங்குடல் ஆகிய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ப்ரோக்கோலி ஹார்மோன்களை சமநிலையில் வைக்கிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது மூன்று ப்ரோக்கோலி எடுத்துக் கொள்ளலாம். முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர், அல்லது ப்ரோக்கோலியை உண்பது உடலை உள்ளிருந்து பாதுகாக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சக்திவாய்ந்த உணவு பூண்டாகும். புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பூண்டு பல் நறுக்கும்போது அதில் உள்ள கந்தகம் நிறைந்த சேர்மங்கள் வெளிவருகின்றன. அதில் அல்லிசின் முக்கியமான சேர்மமாகும். இவை உடலின் நச்சு நீக்க பாதைகளை மேம்படுத்தும். டிஎன்ஏவை சரிசெய்ய உதவுகிறது. செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு, பெருங்குடல், மார்பகம், உணவுக்குழாய் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய்களின் அபாயம் குறையும். பூண்டை நறுக்கி 10 நிமிடங்கள் வைத்துவிட்டு பின்னர் சாப்பிட்டால் முழு நன்மைகள் கிடைக்கும்.
இதில் கரோட்டினாய்டுகள் உள்ளன. கேரட்டிற்கு பீட்டா கரோட்டின் தான் ஆரஞ்சு நிறத்தை கொடுக்கிறது. இவை ஆக்ஸிஜனேற்றிகளை இரட்டிப்பாக்கும். கேரட்டில் இருக்கும் பண்புகளும் பூண்டைப் போலவே புற்றுநோயை தடுக்கிறது. நுரையீரல், வயிறு, புரோஸ்டேட் ஆகிய புற்றுநோய்களின் ஆபத்தைக் குறைக்கிறது. பீட்டா கரோட்டின் உடலுக்குள் வந்த பின் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். இதில் உள்ள சில பைட்டோ கெமிக்கல்கள், லுடீன், பாலிஅசிட்டிலீன்கள் அழற்சி எதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. இதை சாலட் போல செய்து சாப்பிடலாம். பச்சையாம அப்படியே சாப்பிடுவதும் நல்லது.
இந்த உணவுகள் தவிர ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி உண்ணலாம். இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி கொண்டுள்ளவை. டிஎன்ஏவைப் பாதுகாக்க உதவும். தக்காளி புரோஸ்டேட் புற்றுநோயை குறைக்கும் லைகோபீனை தருகிறது. மஞ்சள், கிரீன் டீ, வால்நட்ஸ், பாதாம், முழு தானியங்கள், ஆலிவ் எண்ணெய், பீன்ஸ் போன்றவையும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
வெறும் உணவு மட்டுமின்றி உடற்பயிற்சி, வாழ்க்கை முறையும் கவனிக்க வேண்டியது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். சர்க்கரை கலந்த பானங்களை தவிர்த்துவிட வேண்டும். மதுப் பழக்கத்தை குறைக்க வேண்டும். நல்ல தூக்கம் அவசியம்.