Medicinal Flower: ஒரே ஒரு பூ தான்.. நீரிழிவு முதல் புற்றுநோய் தடுப்பு வரை.. என்ன பூ தெரியுமா?

Published : Jul 10, 2025, 05:54 PM IST

நீரிழிவு நோய் தொடங்கி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் நித்திய கல்யாணி செடி பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
Nithyakalyani flower benefits in tamil

நித்திய கல்யாணி செடி அதன் அழகான பூக்களுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இருப்பினும் இதன் இலைகள், பூக்கள், தண்டுகள் என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், நவீன ஆராய்ச்சியில் கூட இந்த பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நித்திய கல்யாணி பூவிற்கு பல நோய்களை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமானது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துதல். இதன் பூக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள ஹைப்போகிளைசிமிக் பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கின்றன. இந்த பூக்களின் சாறு கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதால், மாவுச்சத்தை குளுக்கோஸாக மாற்றும் செயல்முறை குறைக்கப்படுகிறது.

25
புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படும் நித்திய கல்யாணி

நித்திய கல்யாணி பூக்கள் மற்றும் இலைகளில் வின்ப்ளாஸ்டின் மற்றும் வின்கிரிஸ்டின் போன்ற அல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இவை புற்றுநோயை தடுக்கும் பண்புகள் கொண்டவை. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதிலும், புற்றுநோய் கட்டிகளின் அளவை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் ஆகிய மருத்துவ ஆராய்ச்சியில் நித்திய கல்யாணி முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன மருத்துவத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் நித்திய கல்யாணி செடியில் இருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது. நித்திய கல்யாணி பூக்களை தேநீர் வடிவில் குடித்து வரும்பொழுது இரத்த நாளங்கள் தளர்ந்து இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம், இதயம் சார்ந்த பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது.

35
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு

நித்திய கல்யாணி பூக்களின் இலைகளை அரைத்து காயங்கள், கொப்புளங்கள், தோல் நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் அவை விரைந்து ஆறும். இதற்கு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு தன்மை உண்டு. இதன் காரணமாக தொற்று நோய்களையும் இவை தடுக்கும். சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், வீக்கம், தடிப்பு ஆகியவற்றையும் நீக்குகிறது. நித்திய கல்யாணி பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு சளி, இருமல், ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகள் சரியாகும். நித்திய கல்யாணி செடியின் கசாயம், கடுமையான மன உளைச்சலை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் தூக்கத்தை வரவழைப்பதால் மன அமைதியும் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் கருவுறுதலுக்கு முந்தைய பிரச்சனைகள், அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் வலி, பிசிஓடி, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.

45
மருத்துவ ஆலோசனையுடன் எடுக்க வேண்டியது அவசியம்

நித்திய கல்யாணி செடியின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தாலும் இது சில விஷம் நிறைந்த அல்கலாய்டுகளையும் கொண்டுள்ளது. எனவே இதை உட்கொள்வதற்கு முன்னர் கட்டாயம் சித்த மருத்துவர் அல்லது ஆயுர்வேத நிபுணரை கலந்தாலோசித்து அதன் பின்னரே எடுக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நீண்ட நாட்களாக நோய்களுக்கு மருந்து எடுத்து வருபவர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி இதை பயன்படுத்தக் கூடாது. சுய வைத்தியம் என்றைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நித்திய கல்யாணி பூக்கள் அதன் அழகை தாண்டி வியக்க வைக்கும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் சரியான ஆலோசனையுடன் இதனை எடுக்க வேண்டியது அவசியம்.

55
சுய மருத்துவம் செய்தல் கூடாது

மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் மற்றும் சித்த மருத்துவர்கள் வெளியிடும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. எந்த ஒரு மருத்துவத்தையும் முயற்சி செய்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். சுய மருத்துவம் செய்வது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories