
அழகு.. அழகு.. அழகு தற்போது இது மக்கள் மத்தியில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதிலும் குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் தங்களுடைய முகம் எப்போதுமே பார்க்க ஆளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல விதமான விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் பிற அழகு சாதன பொருட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, வீட்டை விட்டு வெளியே வந்தாலே வெயிலால் சருமம் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக சன்ஸ்கிரீன் மற்றும் ரோஷங்களை வாங்கி கழுத்து, கை, கால்களில் தடவுகிறார்கள்.
இயற்கை மட்டுமே விரும்பும் சிலர் கடலை மாவு, தயிர், மஞ்சள் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் எலுமிச்சை. எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும் என்று பலரது கருத்து. ஆனால் இதை நேரடியாக சருமத்திற்கு பயன்படுத்தினால் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா? சரி இப்போது எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்தலாமா?
முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்றாலும் அது எல்லோருக்கும் பொருந்தாது. ஏனெனில் சிலரது சருமம் ரொம்பவே மென்மையாகவும், நார்மலாகவும், தடித்ததாகவும் இருக்கும். எனவே சரும வகைகளுக்கு ஏற்ப எலுமிச்சையை பயன்படுத்த வேண்டும்.
முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்துவது நன்மைகள் :
எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை எண்ணெய் பசையை குறைக்கும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் பிற சருமத் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உதவும். அதுமட்டுமின்றி இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை பிரகாசமாக வைக்க உதவும்.
முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்துவதும் தீமைகள் :
எலுமிச்சையில் இருக்கும் அமிலம் சருமத்தின் இயற்கையான pH சமநிலையை சீர்குலைத்து விடும். குறிப்பாக மென்மையான சருமம் உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு ரொம்பவே கடினமாக இருக்கும். இதன் விளைவாக அரிப்பு, சிவத்தல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் தோல் சேதமடைய வாய்ப்பு அதிகம் உள்ளன.
முகத்திற்கு எலுமிச்சையை எப்படி பயன்படுத்தலாம்?
- நீங்கள் முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்த விரும்பினால் அதை நேரடியாக பயன்படுத்தாமல் அதனுடன் வேறு ஏதேனும் பொருட்கள் கலந்து உபயோகிக்கலாம்.
- முக்கியமாக பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.
- எலுமிச்சையால் சருமத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
- குறிப்பாக ரொம்பவே சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் எலுமிச்சை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- எலுமிச்சை பயன்படுத்திய பிறகு சரும எரிச்சல் போக்க ஈரப்பதம் தரும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.