
குப்பைமேனி இலைகள் இந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு மூலிகை செடியாகும். இதன் இலைகள், வேர்கள், பூக்கள் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. குறிப்பாக இதன் இலைகளை பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர். தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் குப்பைமேனி இலைகள் தீர்வு தருகின்றன. குறிப்பாக தோலில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள், பூச்சிக்கடி போன்ற பிரச்சனைகளுக்கு குப்பைமேனி இலைகள் எளிய தீர்வை வழங்குகின்றனர். இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குப்பைமேனி இலைகளை அரைத்து சிரங்கு, சொறி, படை உள்ளிட்ட இடங்களில் பூசினால் தோல் நோய்கள் குணமாகும். இதற்கு கிருமி நாசினி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அரிப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த சாற்றை பூசுவதன் மூலமாக அரிப்புகள் குறையும். இலைகளை அரைத்து காயங்கள் மற்றும் புண்களின் மீது கட்டினால் அவை விரைவில் ஆறும். முகப்பரு உள்ளவர்கள் குப்பைமேனி இலை சாற்றை முகத்தில் பூசுவது முகப்பருவை குறைக்க உதவும். சித்த மருத்துவத்தில் குப்பைமேனி இலை சாற்றை உள் மருந்தாகவும் குடிக்க கொடுப்பது வழக்கம். இது சளி மற்றும் இருமலை குறைத்து சுவாசப் பாதையை சீராக்க உதவுகிறது.
குப்பைமேனி இலையின் சாறுகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றுகிறது. இதற்கு மலமிளக்கும் தன்மை இருப்பதால் மலச்சிக்கலை போக்க உதவும். மூட்டு வலி, கால்களில் வீக்கம் ஆகிய பிரச்சனை இருப்பவர்கள் இதன் இலைகளை அரைத்து வீக்கம் மற்றும் வலியுள்ள இடங்களில் பற்றாக போடுவதன் மூலமாக வீக்கத்தை குறைக்கலாம். குப்பைமேனி இலை சாற்றை அருந்தினால் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. குப்பைமேனி இலைகளை வெளிப்புறம் அல்லது உட்புறம் என இரு வழிகளில் பயன்படுத்தலாம். தோல் நோய் இருப்பவர்கள் இந்த இலைகளை பறித்து சுத்தப்படுத்தி சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.
குப்பைமேனி இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை ஆற வைத்து தோல் நோய் உள்ள இடங்களை கழுவலாம். ஒரு கைப்பிடி குப்பைமேனி இலை, ஒரு டீஸ்பூன் கல் உப்பு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 30 மில்லி அளவு நீர் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த விழுதை அரிப்புகள், தடிப்புகள் உள்ள இடங்களில் வெளி பூச்சாக பயன்படுத்த வேண்டும். சருமத்தில் ஏற்படும் கீறல்கள், வறட்சி, வெடிப்புகள் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த மருந்து உதவும். இந்த கலவையை வெளிப்பூச்சாக பயன்படுத்துவதோடு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து வெறும் வயிற்றில் 7 முதல் 14 நாட்கள் சாப்பிட்டு வர அரிப்பின் தீவிரம் கணிசமாக குறைந்து கட்டுக்குள் வரும்.
குப்பைமேனி இலைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் அதை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உட்புறமாக எடுத்துக் கொள்வதற்கு முன்னர் சித்த மருத்துவர் அல்லது ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் இந்த இலையை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த இலை சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே பயன்படுத்துவதற்கு முன்னர் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை சோதிக்க சிறிய அளவில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். குப்பைமேனி நமது தெருவோரங்களில் கிடைக்கும் ஒரு எளிய அதே சமயம் சக்தி வாய்ந்த மூலிகையாகும்.
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்கள் மற்றும் இணையத்தில் சித்த மருத்துவர்கள் வெளியிட்ட ஆலோசனையின் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் செயல்திறன், பக்க விளைவுகள் ஆகியவற்றிற்கு ஏசியாநெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. எந்த ஒரு மருத்துவத்தை எடுப்பதற்கு முன்னர் தகுந்த நிபுணரை கலந்து ஆலோசித்து விட்டு பின்னர் எடுக்க வேண்டும்.