
சித்தரத்தை இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும். இதன் வேர்கள், தண்டுகள் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் சித்தரத்தை சளி தொந்தரவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. சித்தரத்தையை எப்படி பயன்படுத்த வேண்டும்? அதன் பலன்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சித்தரத்தை பொதுவாக கப நிவாரணியாக செயல்படுகிறது. இது நெஞ்சில் தேங்கியிருக்கும் சளியை கரைக்க உதவுகிறது. இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நெஞ்சப் பகுதியில் தேங்கியிருக்கும் சளியை போக்கி சுவாசப்பாதையை சீராக்க உதவுகிறது. இதன் காரமான மற்றும் சூடான தன்மை செரிமான மண்டலத்தை தூண்டி உணவு செரிப்பதற்கு உதவுகிறது. அஜீரணம், வாய்வுக் கோளாறுகள், வயிற்றுப் பிடிப்புகள், செரிமான கோளாறுகளை நீக்குகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கம், தசைவலி, மூட்டு வலி மற்றும் பிற அலர்ஜிகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் சித்தரத்தை வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. பல் வலி, மாதவிடாய் வலிகள் போன்றவற்றையும் குறைக்கிறது. மேலும் இது நல்ல கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கும் சித்தரத்தை மருந்தாக பயன்படுகிறது. அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் இருந்து சித்தரத்தை வேர் தண்டுகளை வாங்க வேண்டும். உலர்ந்த துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல செய்து குடிக்கலாம்.
சித்தரத்தை பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெந்நீரில் கலந்து குடிக்கலாம். வலி அல்லது வீக்கம் உள்ள இடங்களில் அரைத்து பற்றாக போடலாம். இல்லையெனில் சித்தரத்தை வேர்களை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து டிகாஷன் போல தயார் செய்து கொள்ள வேண்டும். நன்கு காய்ச்சி, இளம்சூட்டில் உள்ள பசும்பாலில் சித்தரத்தை கசாயத்தை சிறிதளவு சேர்த்து அதில் பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் சேர்த்து அருந்தலாம். இதை தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் குடித்து வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி போன்ற தொந்தரவுகள் நீங்கும். உடல் வலுப்பெறும்.
சித்தரத்தை பொதுவாக பாதுகாப்பானது என்ற போதிலும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நீண்ட நாட்களாக நோய்களுக்கு மருந்து எடுத்து வருபவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்து அதன் பின்னரே எடுக்க வேண்டும். இதை அதிக அளவில் உட்கொண்டால் சிலருக்கு நெஞ்செரிச்சல் அல்லது ஒவ்வாமைகள் ஏற்படலாம். சித்தரத்தை அதன் மருத்துவ பயன்கள் காரணமாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு சிறந்த மூலிகையாகும். இருப்பினும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். எனவே எந்த ஒரு மருத்துவத்தை தொடங்குவதற்கு முன்பும் தகுந்த நிபுணரிடம் கலந்தாலோசித்து அதன் பின்னர் முடிவெடுக்க வேண்டியது அவசியம்.