
எல்லோருக்குமே ஆரோக்கியமாக இருக்கத்தான் ஆசையாக இருக்கும். நோயின்றி வாழ்வதற்காக எத்தனையோ விஷயங்களை முயற்சி செய்கிறோம். ஆனால் நம் வாழ்வில் சில அன்றாட பழக்கங்களை மாற்றிக் கொண்டால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்க்கையும் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பதிவில் நீங்கள் 'என்றும் இளமையுடன்' வாழ பின்பற்ற வேண்டிய சில நல்ல பழக்கவழக்கங்களை காணலாம்.
வயதாகும்போது சோர்வு, சருமச் சுருக்கங்கள், மூட்டு வலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் வருகிறது. இதனை எதிர்த்துப் போராட உடலுக்கு ஆரம்பத்திலிருந்தே ஊட்டமளிப்பது அவசியம். அப்படி சத்துள்ள உணவுகளை உண்பதுதான் முதுமையை தானாகவே தள்ளிப்போக வைக்கும். இதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், சூரிய ஒளி, தண்ணீர், புரதம், உடற்பயிற்சி குறித்து இங்கு காணலாம்.
அண்மையில் செய்த ஆய்வுகளில் உணவு மட்டுமல்ல, சூரிய ஒளியும் மனித நலவாழ்வுக்கு தேவை என தெரியவந்துள்ளது. சூரிய ஒளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. வைட்டமின் டி எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும்.
அன்றாட உணவில் எல்லா சத்துக்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், தாதுக்கள், புரதம் ஆகியவை உள்ள உணவை எடுத்துக் கொள்வது உங்களை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் குறைபாடுகளைத் தவிர்ப்பதால் வயதான செயல்முறையை தாமதமாக்க முடியும்.
அதிதீவிர உடற்பயிற்சி செய்யமுடியாவிட்டாலும் மிதமான பயிற்சிகளாவது தினமும் செய்யவேண்டும். குறைந்தபட்சம் 20 அல்லது 30 நிமிடங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது இதயத்தையும் இரத்த ஓட்ட அமைப்பையும் சிறப்பாக செயல்பட வைக்கும். நாள்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளைத் தடுக்க உடற்பயிற்சி உதவுகிறது. உங்களுக்கு வயதான பின்னும் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சிகள் உதவும்.
உடலில் காணப்படும் தசைகளை வளர்க்க புரதச்சத்து தேவையானது. உடற்பயிற்சிக்கு பின் தசைகளை மீட்சி அடைய செய்ய உதவுகிறது. இதனைப் பெற சோயாபீன்ஸ், அசைவ உணவுகள், நட்ஸ் போன்ற உணவுகளை உண்ணலாம். உங்கள் உடல் எடைக்கு ஏற்ற அளவில் புரதச்சத்தை உட்கொள்வது அவசியம்.
நாள்தோறும் எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் இரத்தம், சிறுநீரகங்கள், சருமம் ஆரோக்கியமாக இருக்குமாம். நன்றாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.