
தற்போதைய காலத்தில் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சர்க்கரை நோய் குறித்த பல தவறான தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே அல்ல. சர்க்கரை நோயை வாழ்வியல் முறை மாற்றம் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் கவனத்துடன் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரை மருந்துகள், இன்சுலின் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். குறைந்த சர்க்கரை (Hypoglycemia) மற்றும் அதிக சர்க்கரை (hyperglycemia) ஆகிய இரண்டுமே ஆபத்தானவை. எனவே சர்க்கரை நோயாளிகள் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக பசி, அதிக தாகம், தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் இனிப்பு வகைகளை தவிர்த்து விட்டு காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ் வகைகள், பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் சரியான நேரத்தில் சாப்பிடுவது சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.
ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் உடல் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடை அதிகமாகும் பொழுது இன்சுலின் தேவை அதிகமாகிறது. எனவே தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி உடல் எடையை குறைக்கவும், இன்சுலின் உணர் திறனை மேம்படுத்தவும் உதவும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ஆகிய மிதமான பயிற்சிகளை செய்வது நல்லது. எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்னரும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சர்க்கரையை குறைப்பதற்காக மிகக் கடுமையான அல்லது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுதல் ஆபத்தை விளைவிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நரம்புகள் பாதிப்பதுதான். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மற்றும் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படலாம். பாதங்களில் புண்கள் அல்லது தொற்றுகள் ஏற்பட்டு தீவிரமாகி பாதங்களை இழக்கும் நிலை கூட வரலாம். எனவே பாதங்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கால்களை சுத்தமாக வைத்திருப்பது, சரியான காலணிகளை அணிவது, நகங்களை கவனமாக வெட்டுவது போன்றவறை கால்களை பாதுகாக்கும். பாதங்களில் மரத்துப் போன்றது போன்ற உணர்வு, புண்கள் ஏற்படுதல் அல்லது கண்ணாடி போன்ற பொருட்கள் கிழித்து விட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் சராசரி இரத்த சர்க்கரை அளவு (Hba1c), ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு, சிறுநீரக செயல்பாடு, கண் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் தொடர்பான சிகிச்சைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலமாக தீவிர பாதிப்புகளை தவிர்க்கலாம். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் தாமாக மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி சாப்பிடுவது, சுயமாக மருத்துவம் செய்வது போன்றவற்றை செய்தல் கூடாது. மருத்துவரின் அனுமதியின்றி மருந்துகளை நிறுத்தவோ, மாற்றவோ கூடாது.
சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே கிடையாது. கணையத்தில் இன்சுலினின் சுரப்பு குறைவு காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதை முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை, வாழ்வியல் முறை மாற்றங்கள் செய்வதன் மூலம் நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எனவே சர்க்கரை குறித்து பயமோ, பீதியோ அடைய தேவை இல்லை. மேற்கூறிய வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். மேற்கூறியவை அனைத்தும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்வது மட்டுமே தீர்வாகும்.