
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். முட்டையில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் புரதம் அதிகமாக இருப்பதால், புரதம் அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய உணவில் முட்டையை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் முட்டையை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து டைப் 2 நீரிழிவு நோயை தூண்டும் என்று புதிய ஆய்வுகள் சொல்லுகின்றன. இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் எப்போதாவது முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. ஆனால் தினமும் முட்டை சாப்பிட்டால், நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. ஆம், தினமும் முட்டை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது வாரத்திற்கு 3 அல்லது அதற்கு மேல் முட்டைகளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு 39 சதவீதம் வரை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்த பாதிப்பு சீன மக்களிடம் தான் அதிகமாக இருக்கிறதாம்.
இது குறித்து சீன மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், முட்டையை முறையாகவும், அளவோடு சாப்பிடுபவர்களின் உடலில் புரதம் சீராக இருக்கிறது. அதேசமயம் முட்டையை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு 60% வரை நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கண்டுப்பிடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த தாக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக பாதிப்பதாக தெரிவிக்கின்றன. சீன மக்களிடையே முட்டை சாப்பிடுவது நுகர்வு அதிகமாக இருப்பதால்தான் நீரிழிவு நோயின் அபாயம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் நடத்திய இந்த ஆய்வு நிறைய மக்களிடையேயும் மேற்கொள்ளப்பட்டது. அதில் சராசரியாக 50 வயது நிரம்பிய 8,545 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் முட்டை சாப்பிடுகிற வழக்கம் மற்றும் நீரிழிவு நோய் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடுபவர்கள் பலருக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறிந்துள்ளன.
சிலர் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முட்டை சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயையும் தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் மூன்று நாளைக்கு ஒரு முட்டை வீதம் என்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் மற்ற நாட்களில் இரண்டு முட்டை அதுவும் வெள்ளை கருவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முட்டையில் புரதம் அதிகமாகவும், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளதால் இவை இரண்டும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். எனவே நிபுணர்கள் பரிந்துரைத்தபடி நீங்கள் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. ஆனால் உங்களுக்கு இதய பிரச்சினை அல்லது அதிக கொழுப்பு இருந்தால் முட்டை சாப்பிடும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
நீங்கள் புரதத்தின் தேவையை பூர்த்தி செய்ய முட்டை மட்டும் சாப்பிட்டால் போதாது. கூடவே காய்கறிகள், முழு தானியங்கள், பால் பொருட்கள் போன்றவற்றையும் சேர்த்து கொள்வது தான் நல்லது.