தமிழ்நாட்டை பொருத்தவரை இட்லி, தோசை தான் பெரும்பாலான வீடுகளில் சிற்றுண்டியாக இருந்து வருகிறது. தினமும் மாவு அரைக்க நேரம் இல்லாததால் சிலர் மாவை அரைத்து பிரிட்ஜில் சேமித்து வைப்பர். கிட்டத்தட்ட மாவை ஏழு நாள்கள் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆனால் ஒன்று அல்லது இரண்டு நாள்களிலே மாவு புளித்துவிடுவதால், இட்லியை சாப்பிடும்போதே முகம் தன்னால் கோணிக் கொள்ளும். சில எளியமுறைகளை பின்பற்றி மாவு விரைவில் புளிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும்?
இட்லிக்கோ, தோசைக்கோ மாவு அரைக்கும்போது அரிசியை ஊற வைப்பதில் கவனம் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 4 மணி நேரம் அரிசியை ஊறவைத்தால் போதுமானது. அதை விட அதிகமான நேரத்தில் ஊறவைக்கும்போது மாவு விரைவில் புளிக்க ஆரம்பிக்கிறது. அரிசியை விட குறைவான நேரம் உளுந்தை ஊறவைத்தால் போதும். அதிகபட்சமாக ஒரு மணி நேரம் உளுந்தை ஊறவைத்தால் கூட போதுமானது. மாவு அரைக்கும்போது ரொம்ப நேரம் அரைக்க வேண்டாம்.
டிப்ஸ்
சில்வர் பாத்திரத்தை எடுத்து அதனுடைய அடிப்பக்கத்தில் வாழை இலையை வையுங்கள். அதை வைக்கும் போது, நாம் உண்ணும் பகுதிதான் மேலே பார்த்த மாதிரி இருக்க வேண்டும். இப்போது இலைக்கு மேலே புதிதாக அரைத்த மாவை ஊற்றி கொள்ளுங்கள். மாவை இவ்வாறு ஊற்றிய பிறகு மாவுக்கு மேலும் ஒரு வாழை இலையை கவிழ்த்தி வைத்து கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்துங்கள். இந்த செயல்முறையால் 15 நாட்கள் கூட மாவு புளிக்காமல் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதில் உப்பு சேர்க்க கூடாது. இட்லியோ, தோசையோ சமைக்கும்போது உப்பு சேர்த்து போட்டால் போதும்.