
நீங்கள் சாப்பிட்ட பின் நடைபயிற்சி செய்வது உங்களுடைய ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நன்மை செய்யக்கூடியது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மூன்று வேளையும் சாப்பாட்டுக்கு பின்னர் பத்து நிமிடங்கள் நடப்பது அவர்களுடைய சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் சாப்பிட்ட பின்னர் நடப்பது எல்லோருக்கும் நன்மையாக முடிவதில்லை. சிலருக்கு தீய விளைவுகளும் ஏற்படக்கூடும். இந்தப் பதிவில் சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் யார் நடக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
சாப்பிட்ட பின்னர் நடப்பது குடல் இயக்கத்தை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் உணவு செரிமான அமைப்பு வழியாக விரைவில் பயணிக்கும். வீக்கம், வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறையும். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் நீங்கள் நடைபயிற்சி செய்திருந்தால் தொண்டை, உணவு குழாய், வாய், சிறுகுடல், கணையம், கல்லீரல் உள்ளிட்ட செரிமான அமைப்புகளில் ஏற்படக்கூடிய புற்றுநோயின் அபாயத்தை தவிர்க்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.
சாப்பிட்ட பின் நடப்பது உங்களுடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்கு வைக்க உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் நடப்பதால் அவர்களுடைய நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உணவுக்கு பின்னர் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது. சாப்பாட்டிற்கு பின்னர் வெறும் பத்து நிமிடங்கள் நடந்தால் கூட போதுமானது. அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை நடக்கலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உடல் செயல்பாடு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது. வழக்கமான உடற்பயிற்சிகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது; உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. இதனால் பக்கவாதம் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். இதய நோய்களின் அபாயத்திலிருந்து தப்ப வாரத்திற்கு 5 நாட்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களுடைய எடையை அதிகரிக்காமல் தடுக்கிறது. ஏற்கனவே கலோரி பற்றாக்குறை டயட் இருந்து கொண்டே நடைபயிற்சி செய்தால் கணிசமான அளவில் எடையை குறைக்கலாம்.
சாப்பிட்ட பின் நடப்பதால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் சிலர் இதனை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சிலர் சாப்பிட்டவுடனே நடந்தால் அவர்களுக்கு வயிற்றில் அசவுரியம் ஏற்படும். குமட்டல் அஜீரண கோளாறு போன்றவை ஏற்படலாம். மிதமான உணவை சாப்பிடாமல் செரிப்பதற்கு கடினமான உணவை சாப்பிடுபவர்கள் அல்லது அதிகம் சாப்பிடுபவர்கள் உடனே நடப்பதால் அவர்களுக்கு சோர்வு ஏற்படலாம். ஏனென்றால் உணவை ஜீரணிக்க ஆற்றல் தேவைப்படும் நேரத்தில், நடப்பது கூடுதலாக ஆற்றலை செலவழிப்பதால் சோர்வு ஏற்படலாம். சாப்பிட்டதும் நடப்பதால் சிலருக்கு தசைப்பிடிப்பு ஏற்படலாம். உடல் தசைகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் செரிமானத்தில் மட்டும் உடல் கவனம் செலுத்துவதால் இது மாதிரி ஏற்பட வாய்ப்புள்ளது. சாப்பிட்ட உடனே நடக்காமல் பத்து நிமிடங்களுக்கு பிறகு நடக்கலாம்.