Parenting Tips : தூங்க செல்வதற்கு முன் இந்த 5 விஷயங்களை உங்கள் குழந்தையிடம் சொல்லவே கூடாது..

First Published Apr 6, 2024, 3:26 PM IST

தூங்க செல்வதற்கு முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் என்னென்ன விஷயங்களை சொல்லக்கூடாது என்று இந்த பதவில் பார்க்கலாம்.. 

குழந்தை வளர்ப்பு என்பது பல சவால்களுடன் வரும் மிகப்பெரிய பொறுப்பாகும். பெற்றோரும் குழந்தைகளும் அன்பும் உணர்ச்சிகளும் நிறைந்த ஒரு சிறப்புப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் தற்போதைய பிசியான உலகில், தாய், தந்தை இருவருமே தங்கள் வேலையில் மிகவும் பிஸியாகி, தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை.

பெற்றோர்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இரவு தூங்க செல்வதற்கு முன் எப்போதும் தங்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும். தூங்குவதற்கு முந்தைய தருணங்கள் பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் விளைவாக, குழந்தைகள் தூங்குவதற்கு முன் நேர்மறையான விஷயங்களை மட்டுமே கூறுவது மிகவும் முக்கியம். எனவே, தூங்க செல்வதற்கு முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் என்னென்ன விஷயங்களை சொல்லக்கூடாது என்று இந்த பதவில் பார்க்கலாம்.. 

தூங்கும் முன் குழந்தைகளுடன் பேசும் போது, நீங்கள் உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அது அவர்களை தாழ்வாக உணர வைக்கும். மாறாக, பெற்றோர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடாமல் உங்கள் குழந்தையின் தனித்துவமான திறன்களைப் பற்றி பேச வேண்டும். மேலும் அவர்களின் திறமைகளைப் பாராட்ட வேண்டும்.

பெற்றோர்கள் தூங்கும் முன் தங்கள் குழந்தைகளின் மனதில் நேர்மறையான வார்த்தைகளை புகுத்த வேண்டும். எதிர்மறையான விஷயங்களைச் சொல்வது அவர்களை தங்களை தாங்களே கேள்வி கேட்க வைக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு நேர்மறையான கருத்துக்களை வழங்குவதும் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கியம்.

தூங்க செல்வதற்கு முன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்ப வைப்பதற்காக தவறான வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது. முடிந்த வரை தாங்கள் சொல்வதை எல்லாம் பெற்றோர்கள் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். எது தங்களால் முடியுமோ அதை மட்டுமே செய்வதாக வாக்குறுதி அளிக்க வேண்டும்.  இல்லையெனில், குழந்தைகள் இதைப் பின்பற்றத் தொடங்கி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

தூங்கும் முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்கள் எதிர்காலக் கவலைகளைப் பற்றிப் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அது அவர்களை கவலையடையச் செய்வதுடன் அவர்களின் தூக்கத்தையும் கெடுக்கும்.

தூங்கும் முன் குழந்தைகளை தண்டிப்பதையும், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதையும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்கள் அப்படியே விட்டுவிட்டு தூங்கிவிட கூடாது. அந்த பிரச்சனையை தீர்த்து, குழந்தைகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்ய நேர்மறையாகப் பேச வேண்டும். குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே தூங்க வேண்டும். 

click me!