எங்க கிட்ட ஆதாரம் இருக்கு! செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமலாக்கத்துறை பிடியில் மற்றொரு அமைச்சர்.!

First Published Oct 12, 2023, 9:43 AM IST

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 1ம் தேதிக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவரை விசாரணைக்கும் அமலாக்கத்துறை அழைத்திருந்தது. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும், அமைச்சரவையில் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதேநேரத்தில் அமலாக்கத்துறையின் மனுவை ஏற்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறையினரும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை வருகிற நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

click me!