
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி 1952-ம் ஆண்டு பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது இயற்பெயர் விஜயராஜ் நாராயணன். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் விஜயகாந்துக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் 10-ம் வகுப்போடு தன்னுடைய படிப்பை முடித்துக் கொண்டு, தன் தந்தை பார்த்து வந்த அரிசி ஆலையை கவனித்து வந்தார் கேப்டன்.
1965-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தை மட்டும் 70 தடவைக்கு மேல் தியேட்டரில் பார்த்து ரசித்தாராம் விஜயகாந்த். அங்கிருந்து தான் இவருக்கு தமிழ் சினிமாவின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்கக்கூடாது என அவர் அன்று எடுத்த முடிவை இன்று வரை மாற்றியதில்லை.
1978-ம் ஆண்டு இயக்குனர் காஜா இயக்கத்தில் வெளிவந்த இனிக்கும் இளமை என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக கெளரவ தோற்றத்தில் நடித்தார் விஜயகாந்த். அதன் பின்னர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். இரண்டு, மூன்று ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்துக்கு கடந்த 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... என்னது சூர்யா வெஜ்ஜா.. முட்டைக்கு கூட No சொல்லும் 5 கோலிவுட் நடிகர்கள் - யாருனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
இதையடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி கதாநாயகனாக உருவெடுத்த விஜயகாந்த், மனக்கணக்கு, சிவப்பு மாலை, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், ஆட்டோ ராஜா, சாட்சி, நாளை பிறந்தநாள், நூறாவது நாள், ஊமை விழிகள் போன்ற திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, சத்ரியன், புலன் விசாரணை போன்ற திரைப்படங்களில் அற்புதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து குறுகிய காலகட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் விஜயகாந்த்.
பின்னர் 1991-ம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம், அவருக்கு நூறாவது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் ஒரு வனத்துறை அதிகாரியாக நடித்து பேரும் புகழும் பெற்றார் விஜயகாந்த், இப்படத்துக்கு பின்னர் தான் ரசிகர்கள் அவரை செல்லமாக கேப்டன் என அழைக்கத் தொடங்கினர்.
2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் கால்பதித்தார் விஜயகாந்த். 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இவரின் தேமுதிக கட்சி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு கனிசமான வாக்குகளை பெற்று திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதையடுத்து 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட தேமுதிக, போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 இடங்களில் வெற்றிபெற்று திமுக-வை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது. ஆனால் குறுகிய நாட்களில் அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட விஜயகாந்த், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
சினிமா ஆக்ஷன் ஹீரோவாக நடித்தாலும், நிஜத்தில் பாசமுள்ள மனிதராகவே இருந்துள்ளார் கேப்டன். தன்னை நம்பி வந்தவர்களை வயிறாற சாப்பிட வைத்து அனுப்பும் நல்ல உள்ள கொண்ட மனிதரும் கூட. இப்படி சினிமா மற்றுமின்றி அரசியலிலும் அதிரடி காட்டிய விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... படம் ஹிட்டானா ஃபாரின் கார்... கோலிவுட்டில் உருவான புது டிரெண்ட் - காஸ்ட்லி காருக்காக காத்திருக்கும் நெல்சன்..!