தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வான புஸ்சி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். விஜய் அரசியல் எண்ட்ரி கொடுப்பதற்காகவே தனது மக்கள் இயக்கத்தை பலப்படுத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதற்கு அடுத்த கட்டமாக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொண்டு அவர்களுடன் ஆலோசனையும் நடத்தினார் விஜய். இப்படி சைலண்டாக தனது அரசியல் நகர்வுகளை செய்து வரும் விஜய், தற்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம். அதன்படி நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான தேதி தளபதி விஜய் உடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது எனவும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கு சுற்றரிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளாராம். விஜய்யின் இந்த அடுத்தடுத்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை உறுதி... மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் அதிரடி!!