
2025-ம் ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. இந்த ஆண்டு துவங்கும் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் சில இருந்தன. அதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை தான் தழுவின. இந்த ஐந்து மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் அதில் வெறும் 6 படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. மற்ற படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றன. அதில் டாப் 5 பிளாப் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு பொங்கலுக்கு தமிழில் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன படம் வணங்கான். ஏனெனில் சூர்யா நடித்து டிராப் செய்யப்பட்டும் பின்னர் அருண்விஜய் நடிப்பில் இப்படம் வெளியானதால். இது பாலாவின் கம்பேக் படமாக இருக்கும் என்றெல்லாம் பில்டப் விட்டனர். ஆனால் படம் வந்த வேகத்தில் தியேட்டரைவிட்டு தூக்கப்பட்டது. இதற்கு படத்தின் சொதப்பலான திரைக்கதை தான் காரணம். மேலும் பாலா பழைய டெம்பிளேட்டிலேயே படத்தை எடுத்ததாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான முதல் படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். படம் முழுக்க அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட்டு இருந்ததால், ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாஸ் காட்சிகள் இன்றி மந்தமான திரைக்கதையுடன் இருந்ததால் இப்படம் படுதோல்வியை தழுவியது. இப்படத்தால் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். படம் ரிலீசுக்கு முன் இது பிரேமலு போல் இருக்கும் என்றெல்லாம் பில்டப் விட்டார்கள். ஆனால் படம் பார்த்த ரசிகர்கள், ‘தனுஷுக்கு எங்க மேல் என்ன கோபம்’ என கேட்கும் அளவுக்கு படம் படுமோசமாக இருந்தது. தியேட்டரில் 10 கோடி கூட வசூலிக்காத இப்படத்தின் தோல்விக்கு டிராகன் படமும் ஒரு முக்கிய காரணம். அப்படத்தின் வெற்றியால் வந்த வேகத்திலேயே காணாமல் போனது நீக்.
நடிகர் சூர்யாவின் கம்பேக் படமாக ரெட்ரோ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படம் தயாரிப்பாளராக சூர்யாவுக்கு லாபத்தை கொடுத்தாலும், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தது ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். கங்குவா அளவுக்கு பெரும் தோல்வியை சந்திக்காவிட்டாலும், இப்படம் சுமாரான படமாகவே இருந்தது.
2025-ம் ஆண்டின் பிளாப் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப். இது மணிரத்னம் படமா என கேட்கும் அளவுக்கு இப்படம் உள்ளது. இந்த ஆண்டு ஆயிரம் கோடி வசூலிக்கும் என பில்டப் விடப்பட்ட இப்படம் 100 கோடியை தாண்டுவதே கேள்விக்குறியாக உள்ளது. இப்படம் கடுமையாக ட்ரோல் செய்யப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் இதன் புரமோஷன் தான். செல்லும் இடமெல்லாம் படத்தை பற்றி ஓவராக புகழ்ந்து பேசியதால் தற்போது நெட்டிசன்கள் தக் லைஃப் படத்துக்கு தர்ம அடி கொடுக்கிறார்கள்.